பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

115


பாட்டினைக் கொண்டாரல்லர். தங்களோடு இணைந்து விட்ட, இரவலர், விறலியர், போலும் சுற்றத்தார் நலனில் பெரிதும் கருத்துடையராயினர்; என்றாலும், தேவைப்படும் போதெல்லாம் அரசர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி இடித்துரைப்பதிலும் பொருள் செரிந்த அறிவுரைகளை எப்போதும் அளிப்பதிலும், அவர்கள் கண்மூடிச் செயல்பட்டனர்.

கானாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் என்ற புலவர் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் அரசவையில் நெடிது நாட்கள் காத்திருந்தும், பெறவேண்டிய பரிசில் பெற மாட்டாமையால், அவளை இவ்வாறு கடிந்துரைக்கிறார்: "காற்றென விரையும் குதிரைகள் பூட்டப்பெற்ற, வெற்றிக்கொடி பறக்கும் தேர்ப்படை உடையவர் எனவும், கடல் போல் பரந்த படைக்கலம் ஏந்திய படை வீரர்களோடு, மலையையும் மோதி அழிக்கும் களிற்றுப்படையும் உடையவர் எனவும், இடியென முழங்கிப் பகைவர்க்கு அச்சம் ஊட்டும் போர் முரசோடு, பெரும் வெற்றிச்சிறப்பும் உடையர் எனவும் எண்ணிப் பெரும்படையும் பொன் அணியும் உடைய பேரரசர்களின், வெண்கொற்றக் குடைக் கீழ்க் குவிந்து கிடக்கும் பெருஞ்செல்வத்தை மதிப்போம் அல்லோம். முள் வேலியிட்டு அடைக்கப்பட்ட தோட்டத்தில், ஆடுதின்று கழிந்த முன்னைக்கீரையைப் புன்செய் நிலத்தில், விளைந்த வரகரிசிச் சோற்றோடு கலந்து உண்ணும், செல்வ வளம் சிறவாச் சிற்றுார் அரசரே ஆயினும், எம்மை மதித்து, எமக்கு செய்யவேண்டிய முறைமைகளை அறிந்து செய்யும் பண்புடையாரே எம்மால் மதிக்கப்படுவோர் ஆவர். யாம் மிகப் பெரிய துன்பத்தில் ஆழ நேரினும், சிறிதும் அறிவில்லாதார் செல்வத்தைச் சிந்திப்பதும் செய்யோம், நல்லறிவுடையார், வறுமையுற்றுக் கிடப்பினும், அவ்வறுமையிலும் பயன்படுவர். ஆதலின் அன்னார் வறுமையையே பெரிதும் நினைப்போம்".

"வளிநடந்தன்ன வாஅய்ச்செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,