பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

5

கரிகாலன் இளமை வாழ்க்கை:

பொருநராற்றுப்படை, கரிகாலன், தலைநகரை, உறையூரிலிருந்து, காவிரி கடலோடு கலக்குமிடத்தில் உள்ள காவிரிப்பூம்பட்டினத்திற்கு மாற்றுவதற்கு முற்பட்டதான, அவனுடைய ஆட்சிக்காலத்து முற்பகுதியில் பாடப்பட்டிருக்க வேண்டும். அது, அவனை இளையோன், தந்தையின் இறப்பிற்குப் பின்னர்ப் பிறந்தவனாகக் குறிப்பிடுகிறது. “வெல்லும் வேற்படையினையும், அழகிய பல தேர்ப்படைகளையும் உடைய இளஞ்சேட் சென்னியின் திருமகன் முருகக் கடவுளின் சினம்போலும் கடுஞ்சினம் உடைமையால், பகைவர்களை உளம் நடுங்கப் பண்ணும் தலைமையுடையான், தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே, அரச உரிமையைப் பெற்றவன். பண்டு அவன் வலியறியாது பகைத்து நின்ற பகைவர், பின்னர் அவன் வலியறிந்து வந்து அவன் ஏவல் கேட்டு நின்றனர். அவன் ஏவல் கேட்டு அதன் படி நடந்து கொள்ளாத பகை நாட்டவர், அவனால் வர இருக்கும் கேடுகளை எண்ணிக் கலக்கம் உற்றிருந்தனர். உலகத்து உயிர்கள் அனைத்தும் விரும்பும் வெம்மையுடையோனாகி இளஞாயிறு, பகற்போதைச் செய்யும் தன் கதிர்களைக் கடல்மீது பரப்பியவாறே எழுந்து, பின்னர், மெல்லமெல்ல விண்ணிடத்தே உயர்வது போல, பிறந்து, மண்ணில் தவழக் கற்றுக் கொண்ட அந்நாள் தொடங்கி, நாடாளும் பெரும்பாரத்தைத் தன் தோள் மேற்கொண்டு, அதன் வளத்தை நாள்தோறும் பெருக்கினான். ஆளி என அழைக்கப்படும் நல்ல விலங்காம் சிங்கத்தின், எதிர்ப்படும் அனைத்து உயிர்களையும் வருத்தும் குட்டி, கூற்றுவன் ஆற்றலிலும் மிக்க ஆற்றல் உடைமையால் செருக்குற்று, பால் உண்டலைக் கைவிடமாட்டா அத்துணை இளம் பருவத்தில் இரைதேடிச் சென்ற முதல் வேட்டையில், களிற்று யானையைக் கொன்று வீழ்த்தியதுபோலக், கரிகாலன் வெண்ணியில் இருபெரு வேந்தரை அழித்தான். ஆக, கரிகாலன் பாண்டிய, சேர அரசர் இருவரை வெற்றி கொண்டான்.