பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள்

141


கிள்ளிவளவன் புகழ் பாடும் பாட்டு ஒன்றில், அரசர் களிடையேயான ஓர் அரிய வழக்கம் குறிப்பிடப்பட்டுளது: பழைய தமிழரசர்கள். பகைவர்களை வெற்றிகொண்டபோது, அப்பகைவரிடம் கொள்ளும் ஏனைய பொருள்களோடு, அவர்களின் முடிகளையும் கைக்கொண்டு, பகைவர்களின் அம்முடிகளை அழித்துக் கொண்ட பசும் பொன்னால், வீரக்கழல் பண்ணித் தம்கால்களில் அணிந்துகொள்வர். அரசர்களின், வெற்றிப் பெருமிதத்திற்கும், பகைவர்களின் தோல்விப் பேரிழிவிற்கும், இதுவே தமிழர் இலக்கணமாம். புலவர் ஒருவர் இவ்வாறு பாடியுள்ளார். "பகைவர் பாதுகாத்து வந்த, வீரம் செறிந்த அழிக்கலாகா அரண்களை அழிக்காது விடுத்துப் பேணிக்காட்டது செய்யாது, எதிர் சென்று அழித்து, அரணகத்தாரைக் கொன்று, அவர்தம் மகுடங்களை ஆக்க உதவிய பசும்பொன்னால், வீரக்கழல் செய்து, உன் கால்கள், பொலிவுபெறப் புனைந்து கொண்ட பேராண்மையாளன் நீ".

"நீயே, பிறர் ஓம்புறு மறமன் எயில்
ஓம்பாது, கடந்து, அட்டு, அவர்
முடிபுனைந்த பசும்பொன்னின்
அடிபொலியக் கழில் தைஇய

வல்லாளனை வயவேந்தே ! "
- புறம் : 40 : 1-5

சோழன், தன் பகைவனுக்குத் தேர்ந்து வழங்கிய நாகரீக நெறியல்லா நணிமிகக் கொடிய தண்டனை, அவன் அரணைத் தரைமட்டமாக அழித்ததும், தன் பகைவனாம் சேரனுக்கு உரிய தலைநகரை, நண்பகல் போதிலேயே தீயிட்டு அழித்ததும் ஆம்.

"குட்டுவன்
அகப்பா அழிய நுாறிச் செம்பியன்

பகல் தீ வேட்ட ஞாட்பு"
-நற்றிணை: 14: 3-5