பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

7

சொல்லான் முறை செய்தான்; சோழன், குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

--பழமொழி: 25

“வழக்கில், இவன், நல்ல தீர்ப்பு காண மாட்டான். காரணம்; ஆண்டால் இளையவன்” என்று கூறிய நரைத்து முதிர்ந்த பெருமக்கள், உவக்குமாறு, நரைமுடித்து முதியவன் போல் தோன்றி, நல்லதீர்ப்பு வழங்கினான் சோழன். ஆகவே குலவித்தை யாவர்க்கும், கல்லாமலே, அதாவது இயல்பாகவே உண்டாகிவிடும். பொருநராற்றுப்படையின் பிறிதொரு பகுதியில், அவன் உலகனைத்தையும் ஒரு குடைக் கீழ்க் கொண்டுவந்து ஆண்டான் எனக் குறிப்பிடப்பட்டுளது.

“ஒரு குடையான் ஒன்று கூறப்
பெரிது ஆண்ட”

--பொருநராற்றுப்படை : 228 - 229

வெண்ணிப் பறந்தலையில், தன் பகைவர்களாம், பாண்டிய சேர வேந்தர்களை வெற்றிகொண்ட பின்னர்த், தமிழ்நாடு முழுவதிலும் தன் அரசை நிலை பெறச் செய்தான் என்பது இதன் பொருளாதல் கூடும். ஆனால், இப்பாட்டின் இறுதியில், “காவிரி காக்கும் நாட்டின் தலைவனே!” “காவிரி புரக்கும் நாடு கிழவோனே!” (248) எனக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டுள்ளான். ஆதலால், கரிகாலன், பாண்டிய சேர நாடுகளைச் சோழ நாட்டோடு இணைத்துக்கொண்டானல்லன். மாறாகத், தன்னைப் பணிந்து, தன் ஏவல்கேட்கும் சிற்றரசர்களாம் நிலைமையையே, அவர்களிடமிருந்து எதிர்பார்த்தான் எனக் கொள்ளலாம்.

தொடக்க நாட்களில் புலவர் புரவு :

கரிகாலன் உறையூரிலிருந்துகொண்டு, காவிரி நாட்டை ஆண்டிருந்தபோது, பிற்காலத்தில், போஜராசனைப் போல, அவன், புலவர்களைப் பேணும் பெரும் புரவலனாய் விளங்கினான். கரிகாலன் அரசவையில், தமக்கு அளிக்கப்-