பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தமிழர் வரலாறு

பட்ட வரவேற்புச் சிறப்பு குறித்து, முடத்தாமக்கண்ணியார் கூறுவது, இது: பழுமரத்தை நினைந்து பறந்து விரையும் பறவைக்கூட்டம் போல, நானும், அவன் மாநகர் மதிலின் கண் அமைந்துள்ள, அவனை விரும்பி வருவார்க்கு என்றும் அடையாதே திறந்து கிடக்கும் கோபுரவாயிலுள், அவ்வாயிற் காவலுக்குக் கூறாமலே புகுந்து, ஆரவாரப் பேரொலி எப்போதும் எழும், பரந்து அகன்ற இடம் உடையதான அரண்மனைக்குள் சென்றேன். வறுமையால் வாடியிருந்த என் மேனி, அவன் அரண்மனைக்கு வந்த விட்டோம் என்ற களிப்பு மிகுதியால் வாட்டம் தீர்ந்துவளம் பெற்றது. படம் விரித்து எழும் பாம்பின் படத்தில் காணப்படும், கவர்த்த கருங்கோடுபோல், கை விரல்களால் அடியுண்டு அமைந்துவிட்ட கரும் வடுவினைக் கொண்டு இருபக்கமும் அகன்று, இடைசிறுத்த உடுக்கை எழுப்பிய இரட்டை தாள இசைக்கு ஏற்ப, வாய்ப்பாட்டு ஒன்றினைப் பேரொளியுடையதான வெள்ளியாகிய வான்மீன் தோன்றிவிட்ட, மிக்க இருள் செறிந்த விடியற்போதில், பாடத் தொடங்கினேன். நான், அவ்வாறு தொடங்குவதற்கு முன்னரே, தன்னுடைய நெருங்கிய உறவினரைப் போலவே, என்னுடன் உறவு கொள்ள விரும்பினான். வரையாது கொடுத்து வான்புகழ் ஈட்டுவதற்கு வாய்ப்பாக, எப்போதும், நான், அவனிடமே சென்று இரந்து நிற்பதற்கு ஏற்ற, இனிய முகமன் உரைகளை மொழிந்தான். நான் எப்போதும், அவன் கண்ணில் பட்டுக்கொண்டிருக்குமாறு, மிக அணித்தான ஓர் இடத்தை எனக்கு அளித்தான். தன் கண்களால், என்னை அப்படியே விழுங்கி விடுவதுபோலும் பார்வையால், என் உடலெலும்புகளெல்லாம், அன்பின் மிகுதியால், வெண்ணெய்போல இளகிவிடும் வண்ணம், அன்புத் தண்ணருளைச் சொரிந்தான். ஈரும் பேனும் கூடியிருந்து ஆட்சிசெய்யும், வேர்வையால் நனைந்து நனைந்து நைந்துபோன, வேற்றுநூல் இடையே நுழைவதற்கு ஏற்பப் பெரிய அளவில் கிழிந்து, தைக்கப் பெற்ற என் கந்தல் ஆடையை அறவே அகற்றிவிட்டு, இது இழையோடிய வழி எனக் கண்ணால் கண்டுகொள்ளாவாறு நுண்ணிதாக நெய்யப்-