பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய அரசர்கள்

173


பெருமளவில் கிடைக்கலாயின. இவன், நனி இளையனாக இருக்கும்போது, இவன் காலத்திய சோழ, சேர அரசர்கள் இவனை எதிர்த்துப் படைதொடுத்து வந்தபோது, இவன், பாண்டியர் அரியணையில் அமர்ந்தான். இவன் பகைவர்கள், "நாமோ சிறந்தவர்கள்; மேலும் அனைத்து நிலையாலும் பெரியவர்கள்; நம் பகைவனாகிய இவனோ நனிமிகச் சிறியவன்: ஆனால், வென்று கொள்ளலாம் பொருளோ அளப்பரியன" என எண்ணினர்.

"விழுமியம்; பெரியம் யாமே; நம்மில்

பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது"
-புறம் : 78 :5-6.

படையெடுத்து வந்தாரை, நெடுஞ்செழியன், மதுரையிலிருந்து துரத்தி அடித்தான். புலவர் இவ்வாறு கூறுகிறார்:- "மலர்மாலையினையும், தலையில் மை பூசப்பட்ட யானைப் படையினையும் உடைய, வீரம் செறிந்த போரில் வல்ல பாண்டியன், எக்காலத்தும் நின்று போகாது தொடர்ந்து நடைபெறும் விழாக்கள் மலிந்த, தன் மதுரை மாநகர்க்கு, அணித்தாக நடைபெற்ற போர்க்களத்தில், தம்முள் ஒன்றுகூடி வந்து போரிட்ட, சேர, சோழர்களாம் இரு பெருவேந்தர்களின் கடல் போல் பரந்த பெரும்படையினை, நிலைகுலைந்து போகுமாறு தாக்கி ஒலிக்கும் அவர் முரசுகள், ஒலி அவிந்து போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கத் தோற்று ஓடும் அவர் புறமுதுகை க் கண்டான்" .

"மலர்தார்,
மையணி யானை, மறப்போர்ச் செழியன்,
பொய்யா விழவின் கூடற் பறந்தலை
உடன்இயைந்து எழுந்த இருபெரு வேந்தர்
கடல்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி,
இரங்கிசை முரசும் ஒழியப், பரந்து அவர்

ஓடு புறம் கண்ட"
-அகம்: 116:12:12.18.