பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய அரசர்கள்

193


புகலிடங்களில் அரசு வைத்து வளர்க்கும், களிறுகளின் பிளிறல், புலிகளின் முழக்கம் ஆகியனவும் பங்கு கொண்டன. செல்வர்களின் மாளிகை முற்றங்கள், பேணப்படும் பொருளாக முன்னாள் கருதப்பட்டு, இன்று குப்பையாகி விட்ட, சூடிக்கழித்து உதிர்த்த மலர்வாடல்கள் அகற்றப்பட்டுத் துப்புரவு செய்யப்பட்டன. பொழுது, விரைந்து புலரவும், பல்வேறு போர்க்களங்களிலிருந்து மீளும் வேந்தன் நாற்படை. களிறுகள், குதிரைகள், கைப்பற்றிய கோட்டைகளின், அணி நலம் சிறந்த அழகிய வாயிற்கதவுகள், பகைவர் நாட்டை எரியூட்டிக் கவர்ந்து, ப கை கொ ல் லு ம் வேற்படைக் காம்புகளையே, கோலாகக் கொண்டு ஓட்டி வந்த பசுநிரைகள், ஆகிய திறைப் பொருள்களையும் உடன் கொண்டு வருவவாயின. வெற்றி கொள்ளப்பட்ட சிற்றரசர் கூட்டம், மதுரை மாநகரத்து வேந்தன் விழித்து எழுந்ததும், அவன்பால் சமாதானத்தை இரந்து பெறுவான் வேண்டி, அவ்வெற்றிப் படைகளின் அணி வகுப்பைத் தொடர்ந்து வரலாயினர். வெற்றி, கொண்டு மீளும் நாற்படைகளின் பேரணி, அதைத் தொடர்ந்து, தோற்ற அரசர்கள், திறை தந்து பணிந்து போக வருவது ஆகிய இவை, மதுரை மாநகர்க்கு நாம் சென்ற அற்றைக் காலைப்போதில் மட்டுமே நிகழ்ந்த நிகழ்ச்சிகளாக நாம் கருதி விடுவதைத் தடுப்பான் வேண்டி, கங்கைப் பேராறு, தான் கொண்டு வரும் அரும் பொருட்குவியல்களையெல்லாம் கடலில் சேர்ப்பது போல, உலகத்துப் பொருட்கள் எல்லாம், இன்று போலவே, ஒவ்வொரு நாளும், அம்மாநகருள் வந்து பாயும் என்பதையும், புலவர், சேர்த்துக் கூறியுள்ளார். ஊர்வலம், நம்மைக் கடந்து கொண்டிருக்கும்போதே, வானத்தில் ஞாயிறு எழுந்து விடுகிறான். மதுரை மாநகரும், முன்னாள் காலையில்,

த.வ, II-13