பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தமிழர் வரலாறு


கிருஷ்ணனைப் பற்றிய மேலும் இரு குறிப்புகளும் உள்ளன, ஒன்றில், பொருள் உரைத்து விளக்கம் அளிப்பதில் வல்ல மாயோனைப் போன்று முழுப்புகழ் வாய்ந்தவன் என ஒரு பாண்டியனைப் புகழும் இடம் ஒன்று :

"மாயோன் அன்ன

உரை சால் சிறப்பின் புகழ்"
- புறம் : 57 : 2 - 3

கிருஷ்ணன் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றும் புறநானூற்றில் விளக்கப்பட்டுளது : "பிறரை வருத்தும் அச்சம் மிகுந்த அசுரர் கூட்டம், வானத்து உச்சியில் விளங்கும் ஞாயிற்றைக் கவர்ந்து கொண்டு போய் மறைத்து விட்டார்களாக, ஞாயிற்றைக் காண மாட்டாமையால், காரிருள் உலகத்தார் கண்களை மறைத்துவிட உலகத்து உயிர்கள் பட்ட துன்பமெல்லாம் அகலுமாறு வலிமை வாய்ந்த, அஞ்சன வண்ணனாம் கிருஷ்ணன், அஞ்ஞாயிற்றை மீட்டுக் கொணர்ந்து நிறுத்தி, உலகத்தார் துயர் தீர்த்தாற்போல்."

"அணங்குடை அவுணர்கணம் கொண்டு ஒளித்தெனச்
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறுகாணாது
இருள் கண் கெடுத்த பரிதி ஞாலத்து
இடும் பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்

அஞ்சன வண்ணன் தந்து நிறுத் தாங்கு."
-புறம் : 1 74 : 1-5 .

அகநானூற்றின் [59 : 5-6] ஒரு தொடர், ஆயர்மகளிர், ஆன்டயாக உடுத்திக் கொள்ள இளந்தளிர்களைக் கொய்து கொள்வதற்கு வாய்ப்பாக, மரக்கிளைகளை மிதித்துத் தாழ்த்திக் கொடுத்த திருமாவின் செயலைக் குறிப்பிடுகிறது :

"அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்,
மரம் செல மிதித்த மாஅல் போல, "