பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் அறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

209


"அருப்பம் பேணாது அமர் கடந்ததுாஉம்

துணைபுணர் ஆயமொடு தகம்பு உடன் தொலைச்சி".
- புறம் : 224 : 1.2.

ஆரிய வழிபாட்டு நெறிகளுக்கு அளித்த ஆதரவு, பழந்தமிழ் மரபு நெறிகளிலிருந்து பெரும்பிரிவினை வலிந்து கொண்டு போய் விடவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.

புறத்தின் தோழமைத் தொகை நூலாம் அகத்தில், தமிழ் ராஜாக்களால் போற்றி வளர்க்கப் பெற்ற வேத வேள்விகள் பற்றிய குறிப்பு எதுவும் இடம் பெறவில்லை. ஆனால் பரசுராமன் மேற்கொண்ட வேள்வி ஒன்று விரித்துரைக்கப் பட்டுளது. அத்தொகைப் பாக்களில் இடம் பெறும் பல்வேறு உவமைகளில், ஓர் உவமை, இவ்வாறு கூறுகிறது : "மன்னர் குலத்தை அழித்த மழுப்படை யுடையோனாகிய பரசுராமன், முன்னர், அரிதின் முயன்று செய்து முடித்த வேள்விக்கண், இடையில் கயிறு சுற்றப்பட்டு, அழகு செய்யப்பட்ட, அரிய காவலும் அமைந்த உயர்ந்த வேள்வித் துாண் போல:"

"மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்விக்
கயிறு அரையாத்த காண்தகு வனப்பின்

அருங்கடி நெடுந் துாண் போல:"
-அகம் : 220 : 6-8;

பிராமணர் :

யாகங்கள் செய்யாத பிராமணன், அகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளான். ["வேளாப் பார்ப்பான் வாளரம் துமித்தவளை" (அகம் : 24 : 1-2)}

[உரையாசிரியர், 'வேளாப் பார்ப்பான்' என்ற தொடர்க்கு 'யாகம் பண்ணாத ஊர்ப்பார்ப்பான்' எனப் பொருள் கூறியுள்ளார். அத்தகைய பார்ப்பனர் சங்கை