பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் அறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

213

உடலைத் தீயிட்டு எரிக்கும் வழக்கமும் மேற் கொள்ளப்பட்டது. இவ்வழக்கம் எழுவதற்கு முன்னர், உயிர் பிரித்த உடல், முழுமையாகவோ, அல்லது உயிர் உண்ணும் பறவைகளால் விரைந்து உண்டு தீர்ப்பதற்கு வாய்ப்பாகப் பல்வேறு துண்டுகளாக வெட்டப்பட்டோ எறியப்படும்; அல்லது, பெரும்பாலும், தாழிகளில் இடப்பட்டு மண்ணுள் புதைக்கப்படும். தென்னிந்தியாவில், தீ வழிபாட்டின் தெய்வீகத் தன்மையை ஏற்றுக் கொண்ட குடும்பங்கள், உடலுக்குத் தீயூட்டும் வழக்கத்தை ஏற்றுக் கொண்டன. பலநூறு ஆண்டு களுக்கு முன்னர் தீ வழிபாட்டு நெறி. மிகவும் சீர்கெட்ட நிலையில், பண்டைய கிரேக்கத்தையும், பண்டைய உரோமையும் சென்று அடைந்தது, அதைத் தொடர்ந்து பிணம் சுடும் முறையும் சென்று சேர்ந்தது. ஆரிய வழிபாட்டு நெறி வளையத்துக்கு வெளியில் இருப்பதை உறுதியாகக் கடைப்பிடித்து வந்த ஒரு பிரிவு மக்கள், இன்னமும், பிணங்களைப் புதைப்பதையே மேற்கொண்டிருந்த தென்னிந்தியாவில், பிணம் சுடும் வழக்கம், மெதுவாகப் பரவத் தலைப்பட்டது. [சந்நியாசிகள் புதைக்கப்பட்டனர் எரிக்கப்படவில்லை. இதற்குக் காரணம், ஒன்று, சந்நியாசிகள், மிகவும் சிறப்பிக்கத் தக்க புனிதம் வாய்ந்த வாழ்ககையை மேற்கொண்டு வந்தனர். ஆதலின், அவர் உடல்கள், நிலையால், அச் சந்நியாசிகளைவிடச் சிறந்தவர்கள் அல்லாத கடவுள்களுக்குப் படைக்கப்படுவதன் மூலம், அவ்வுடல்களின் புனிதத்தன்மை கெடுக்கப்பட்டுவிடும்; அல்லது, புதைப்பதே, தொன்று தொட்டுவந்த வழக்கமாம் ஆதலின் அது அவர்களுக்காக என வரையறுக்கப்பட்டிருந்தது] சுடுதல் குறித்துப் புறநானூற்றில் காணப்படும் குறிப்புக்கள் கீழ்வருவனவே. "காட்டினை வெட்டிச் சுட்ட கொல்லை நிலத்தில், குறவன் தறித்துப் போட்ட மரத்துண்டுகள் போன்ற கருத்த விறகால் அடுக்கப்பட்ட ஈமத்தின்கண் எரிகின்ற ஒள்ளிய தழல்".

"எறிபுனக் குறவன் குறையல் அன்ன

கரிபுற விறகின் சம ஒள்ளழல்"
-புறம் : 231 : 1-2