பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

253


தம்முடைய பாக்களில், தமக்கு முன் வாழ்ந்த எண்ணற்ற அரசர்கள், குறுநிலத்தலைவர்களைக் குறிப்பிடும், பிற்காலப் புலவராம், மாமூலனார், நெடுஞ்சேரலாதனின், வெற்றிச் செயல்களையெல்லாம், "வெற்றி தரும் போர் முரசினையுடைய நெடுஞ்சேரலாதன், கடலிடையே சென்று, அங்கு அரசு செய்திருந்த கடம்பரின் காவல் மரத்தை வெட்டி, இமையமலையில், தனது முன்னோரைப் போலவே வளைந்த வில்லாம் தன் இலச்சினையைப் பொறித்து, மாந்தை எனும் ஊரில் உள்ள தன் அரண்மனை முற்றத்தே, பகைவர் பணிந்து வந்து திறையாகக் குவித்த பெருமை மிக்க நல்ல அணிகலன்கள், பொன்னால் செய்யப்பட்ட பாவையினையும், வயிரங்களையும் கொண்டவன்" எனத் தொகுத்துக் கூறியுள்ளார்.

"வலம்படு முரசின் சேர லாதன்,
முந்நீர் ஓட்டிக், கடம்பு எறிந்து, இமயத்து
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன்கலம்

பொன் செய் பாவை வயிரமொடு"
- அகம் 127 : 3-8

நெடுஞ்சேரலாதனின் தந்தை, வானத்தையே நாட்டு எல்லையாகக் கொண்டவன் எனும் பொருள் உடையதான் "வானவரம்பன்" : அவன்மகன். இமையத்தையே நாட்டு எல்லையாகக் கொண்ட, "இமையவரம்பன்" ஆகிவிட்டான்.

நெடுஞ்சேரலாதன் குறித்த கற்பனைகள்:

நெடுஞ்சேரலாதனின் இமயம் வரையான வெற்றி, குறித்துப் பதிற்றுப்பத்தில் காணப்படும், முரட்டுக்கண்மூடித்தனமான தெளிவில்லாத கூற்று இவ்வாறு, அம்மலை உச்சியில் தன் வில் இலச்சினையைப் பொறித்த உண்மையான நிகழ்ச்சியாக உறுதிப்பட்டு விட்டதைக் காண்கிறோம்.{{Nop}}