பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

தமிழர் வரலாறு


பாண்டியலும், வடபுலத்து அரசர்களை வாடச்செய்தான் எனக்கூறப்பட்டுளது. "வடபுல மன்னர் வாட அடல் குறித்து இன்னாவெம்போர் இயல் தேர்வமுதி "(புறம் : 52 : 5 - 6); அவன் வடபுல அரசர்களை வெற்றி கொண்ட போர்க்களம் எது என்பது குறிப்பிடப் படாமையால், இது வெறும் தற்பெருமையே யாம். இவனைப் பாடிய புலவர், ஆரியக் கருத்துக்கள் பெருமளவில் இடம் பெற்றிருக்கும் மருதக்கலி பாடிய, மருதன் இளநாகனாராதலின், இவன் மிகவும் பிற்பட்ட காலத்தவனாதல் வேண்டும்.

ஈண்டுக் காட்டிய எடுத்துக் காட்டுக்கள், இனிவரும் பகுதிகளில் ஆராயப்போகும் எடுத்துக் காட்டுக்களின் அடிப்படையில், திருவாளர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் ஆரியர்களின் குடியேற்றத்திற்கு அப்பாலும், மெளரியர்கள், அவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆந்திரர்களின் கீழ், எண்ணற்ற ஆரியப்படையெடுப்பும் நிகழ்ந்தன என்ற உறுதியான முடிவினை உருவாக்கியுள்ளார். ஆதலின் இப்பொருள், இத்துணை விரிவாக ஆராயப்பட்டது.

கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் :

கடலைப் புறங்காட்டி ஓடப்பண்ணிய வேலுக்கு உரியவனாகிய குட்டுவன், அதாவது கடலோட்டிய வேல்கெழு குட்டுவன். அவன் புகழ்பாடும் பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்தின் பதிகத்தின்படி, நெடுஞ்சேரலாதன் மகனாவன் ஆனால், இக்குட்டுவனின் தாயின் பெயரைக் குறிப்பிடும் வரி, நம்புதற்கு இயலாவாறு பிழைபட்டுளது. வடவரை அஞ்சப் பண்ணும், வானளாவ உயர்ந்த கொடி உடையவனும், குடவர் கோமானும் ஆகிய நெடுஞ்சேரலாதனுக்குச், சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்" என்கிறது. (ஐந்தாம் பத்து: பதிகம் : 1 - 3)

"வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்

சோழன் மணக்கிள்ளி சன்ற மகன்".

{{Nop}}