பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

தமிழர் வரலாறு


"கோடுநரல் பெளவம் கலங்க வேலிட்டு
உடைதிரைப் பரப்பின் படுகடல் ஓட்டிய

வேல்புகழ் குட்டுவன்"
-பதிற்று : 40 : 11-18

புலவர், அவனை, "அழிக்க இயலாத புகழை நிலைநாட்டி கடலிடையே புகுந்து, அக்கடலோடு பெரும்போர்புரிந் குளிர்ந்த கடற்றுறைகளைக் கொண்ட பரதவனே!" என மேலும் ஒருமுறை அழைக்கிறார்.

"கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ !"

அடுத்து அடுத்துத் திரும்பத்திரும்பக் கூறப்படும் இப்பாராட்டு உணர்த்தும் பொருள் யாது என்பதை யூகித்து அறிதல் கடினம். குட்டுவன் வேல், அவ்வாறு வீசப்பட்டதால் கேன்யூட் (Canute) என்பாரின் உரத்துக்குரல் எழுப்பி இட்ட ஆணை சாதிக்காத எதைச் சாதித்துளது? வேல் எறிதல் குட்டுவனின் கடலாதிக்கத்தை உணர்த்தும் சின்னமாகவே பெரும்பாலும் உள்ளுணர்வோடு நடைபெற்றுளது. பரணர் அகத்துறைப் பாடல் ஒன்றில் அப்பொருள் குறித்து மீண்டும் கூறியுள்ளார். "குட்டுவன், தன்னுடன் போரிடவல்ல பகைவரை, நில எல்லைக்குள் காணாமையால், பொங்கி எழும் சினம் மிகுந்து, போர் புரியும் தன் ஆற்றலால், கடலை வளைத்து ஓங்கி எழும் அலைகளையுடைய கடல் பின்னிட்டு ஓடுமாறு ஓட்டிய, வெற்றி மாண்பு மிக்க வேல்"

"குட்டுவன்
பொருமுரண் பெறாஅது, விலங்கு சினம் சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்குதிரைப் பெளவம் நீங்க ஒட்டிய

நீர்மாண் எஃகம்."
-அகம் : 212:16-20