பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

301


அல்லது, புதுமை என்ற பொருளில் ஆளப்பட்டிலது. கார் காலத்து மழையே நிலைத்துநின்று பெய்யும் மழை; ஒரோ வழி, அக்கார்காலம் தொடங்குவதற்கு முன்பே, கணப்பொழுது கனமழை பெய்து விடுவதும் உண்டு. அம்மழை காணும் அகத்திணைத் தலைவியர், அதைக் கார்காலத்து மழையாகக் கொண்டு, காதலன் கூறிச்சென்ற கார்காலம் வந்துவிடவும், அவன் வந்திலனே என வருந்தும் நிலையில், அவர்களின் தோழியர், இது கார்காலத்தில் பெய்யும் நிலைத்த மழையன்று : கார்காலம் தொடங்குவதற்கு முன்பே, ஒரோ வழி வந்து பெய்து ஓய்ந்து விடும் நிலையில்லாத மழை எனத் தேற்றுங்கால், அம்மழையின் நிலையில்லாத் தன்மையை உணர்த்தக் கையாளும் சொல்லே, வம்பு என்ற இச்சொல். "வம்பமாரி" (குறுந் : 66) , "வம்புப் பெய்யுமால் மழையே" (குறுந் : 382) என்ற தொடர்களைக் காண்க.

அதேபோல், உயிரிழக்கப் போவதை அறியாதே போரிட வந்த அரசர்களையும், வீரர்களையும் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே, வம்பு என்ற சொல்லைப், பு ல வ ர் க ள் ஆண்டுள்ளனர். "வம்ப வேந்தன்", "வம்ப வேந்தர்", "வம்ப மன்னர்". (புறம் : 287 ; 345 ; 78.) என்ற தொடர்கள் ஆளப்பட்டிருக்கும் அப்பாடல்களின் சூழ்நிலப் பொருளைக் காண்க.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வம்பு, என்ற சொல்லுக்கு நிலையின்மை என்பதே பொருளாம் எனத் தொல்காப்பியரும் இலக்கணம் வகுத்துள்ளார். "வம்பு நிலையின்மை" (தொல். உரி. 29). சூத்திரம் காண்க.

ஆக, "வம்பமோரியர்" என்ற தொடருக்குத் தமிழகத்தின் மீது போர் தொடுத்து வருவதன் விளைவாக, அழிந்து போகப்போகும், நிலையாமையினைத் தழுவப் போகும் மோரியர் என்பதே பொருந்தும் பொருளாகுமே அல்லது, புதிய மோரியர் என்பது பொருந்து பொருளாகாது.{{Nop}}