பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

தமிழர் வரலாறு

ஆக, வம்ப என்ற ஒரு சொல்லுக்குப் பொருந்தாப் பொருள் கொண்டு விட்டு, அச்சிறு ஆதாரத்தைப் பிடித்துக் கொண்டு, தமிழகம் வந்த மோரியரையும், அவர்களைக் குறிப்பிடும் மாமூலனாரையும், சிலநூறு ஆண்டு காலத்திற்குப் பின் நோக்கித் துரத்திவிடுவது பொருந்தாது.

தென்னிந்திய வரலாறு எழுதிய வரலாற்றுப் பேராசிரியர்களுள், திருவாளர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களும் ஒருவர். அவர், தம்முடைய தென்னிந்திய வரலாற்றின் தொடக்கம் [Beginning of south Indian History Page : 85]. என்ற நூலில், "மோரியர் வருகையைக் குறிக்கும் பாடற்பகுதிகள், கி. பி. முதலாம் நூற்றாண்டிற்கு உரியவாம் எனக் கொள்ளுதல் வேண்டும்." என்றும், "மாமூலனார் கரிகால் பெருவளத்தான் சமகாலத்தவர் என்பதற்குப் போதுமான அகச்சான்றுகள் உள்ளன" என்றும் கூறிக், கரிகாலன் பகைவனும் பெருஞ்சேரலாதன், போரில் பெற்ற புறப்புண்ணுக்கு நாணி, வடக்கிருந்த உயிர் விட்டது கேட்ட சான்றோர்களும் வடக்கிருந்து உயிர்விட்ட செய்தியைக் கூறும் மாமூலனார் பாட்டைத் (அகம் : 55) தம் கூற்றிற்கு ஆதாரமாகவும் கொண்டுள்ளார்.

இதை எடுத்துக் காட்டியிருக்கும் திருவாளா பி. டி. எஸ். அவர்கள், சந்திரகுப்தன் அல்லது பிந்துசாரன் காலத்தில் மெளரியரின் தென்னிந்தியப் படையெடுப்பு நிகழ்ந்தது என்ற கூற்று, இந்நான்கு பாக்களையே அடிப்படையாகக் கொண்டுளது, எனக் கூ றி வி ட் டு , "திருவாளர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், தம் முடிவிற்குப் போதுமான அகச்சான்று இருப்பதாகக் கூறினாரேயல்லது, அந்த அகச்சான்று யாது என்பதைக் கூறினார் அல்லர்" என்று கூறிவிட்டு, அவர் கூறிய முடிவை மறுக்கவல்ல எந்த வாதத்தையும், தாமும் எடுத்துவைக்காமல், மாமூலனார், கி. பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்தவர் என்ற, தம்முடைய பழைய பல்லவியையே பாடி முடித்துள்ளார். [The theory of the Mauryan invasion of