பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

தமிழர் வரலாறு

ஆகும். கணவனைப் பிரிந்து தனித்து இருப்பதால் உற்ற அரச மாதேவியின் துன்பத்தையும், கணவன் விரைந்து மீண்டு, தன் தோளைத் தழுவுவதற்காக, அவன் வெற்றிக்கு வழி செய்யுமாறு, தமிழரின் பண்டைப் போர்க்கடவுளாம் கொற்றவையை அவள் வழிபடுவதையும் விளக்குவதே, இதன் பாடற்பொருளாம். அரசமாதேவி, இவ்வாறு, தமிழ்க் கடவுளாம் கொற்றவையை வழிபடுகின்றனள் என்றாலும், ஆரியக் கொள்கைகளும் கோட்பாடுகளும், தமிழர் வாழ்வில் உறுதியாக இடம் பெற்றுவிட்ட பின்னரே, இப்பாடல் பாடப் பெற்றது என்பது தெளிவான ஒன்று. ஆரியக் கலாச்சாரம் பற்றிய குறிப்புக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக அல்லாமல், அடுத்தடுத்துப் பெருகவே இடம் பெற்றுள்ளன. கட்டிடக்கலை நூல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுளது. "சிற்ப நூலை அறிந்த அறிஞர்கள், மெல்லிய நூலைக் கூரிதாக நேரே பிடித்துத், திசைகளைக் குறித்துக் கொண்டு, அத்திசைகளுக்கு உரிய தெய்வங்களையும் பார்த்து, பெரும் புகழ் வாய்ந்த மன்னர்க்கு ஏற்புடைய மனைகளை வகுத்தனர்."

"நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டுத்
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கிப்

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து"
-நெடுநல்வாடை 76-78.

வாயிற்படியின் மேல்பகுதி பொருத்தப்படும் சுவரின் பகுதி உத்தர கற்கவி என அழைக்கப்படும் : அச்சொல் வானநூலொடுபட்ட சிலேடையாகக் கூறப்பட்டுளது. ஒரு விண்மீனின் பெயரால் பெயர் பெற்ற வாயிற்படியின் மேல்பகுதி பொருத்தப் பெற்ற கற்கவி எனும் பொருளில், "நாளொடு பெயரிய கோள் அமைவிழுமரம்" (நெடுநல் : 82) எனக் கூறப்பட்டுளது ஈண்டுக்குறிப்பிடப்பட்ட விண்மீன் உத்தரம் : அம்மரம், உத்தரம் என அழைக்கப் பெறும். அரண்மனைக்குள்ளே, அரசன் இருந்து ஆட்சி நடத்தும் உள் அறை, திருக்கோயிலில், அக்கோயிலுக்குரிய தெய்வத் திருமேனி