பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் 25

முனிவர்கள் எடுக்கும் வேள்வித் தீயிலிருந்து எழும் வேள்விப் புகைக்கு அஞ்சி, குயில், தன் கரியபெரிய பெடையோடு பறந்தோடிவிடும் பூம்பொழில்களும் இருந்தன. .

                           ‘தவப் பள்ளி, தாழ்காவின்
                            அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும் 
                            ஆவுதி நறும் புகை முனை இக் குயில் தம் 
                            மாயிரும் பெடையோடு இரியல் போகி’.
                                                             -பட்டினப்பாலை : 53 - 56

காஞ்சியைத் தவிர்த்துத் தமிழகத்துப் பிற நகரங்களில், பிராமணர்கள், புத்தர்கள் சமணர்களின் குடியிருப்புக்களைத் தமிழிலக்கியத்தில், இப்போதுதான் முதன்முதலில் கேள்விப் படுகிறோம். (ஆசிரியன் இக்கூற்று உண்மைக்கு மாறானது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் புகழ் பாடும் மதுரைக் காஞ்சியில் மதுரைமாநகரைக் கவ்விக் கொண்டுவிட்ட ஆரிய நாகரீகக் குறிப்புக்கள் அடுக்கடுக்காகக் கூறப்பட்டுள்ளன. முதுகுடுமிப் பெருவழுதி உள்ளிட்ட பாண்டிய அரசர்கள் பற்றி ஆராயும் இதே நூலின், “பாண்டிய அரசர்கள்" என்ற தலைப்பிடப்பெற்றுள்ள 23வது அதிகாரத்தில், இதே ஆசிரியர், மதுரை மாநகரத்தில் இடம் கொண்டுவிட்ட ஆரிய நாகரீகக் குறிப்புக்களை, மதுரைக் காஞ்சியிலிருந்தும், புறநானூற்றிலிருந்தும் அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுக்களை எடுத்து ஆண்டுள்ளார்.) பாட்டின் மற்றொரு பகுதியில், ஆரிய நாட்டு மாநிலங்களில் உள்ளது. போலவே, காவிரிப்பூம்பட்டினத்தில், தாம் கற்ற பல்வேறு கல்வித் துறைகளிலும், முட்டறக்கற்ற மூதறிவாளராம் வாதிகள், தம்மோடு வாதிடவல்லார் வருக என அறைகூவி அழைப்பதை உணர்த்தும் கொடிகள் நாட்டிப்பட்டிருப்பது கூறப்பட்டுளது, ஆகவே, இக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் ஆரிய நாகரீகத்தின் மிகப்பெரிய மையமாக ஆகியிருக்க வேண்டும்.