பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரம் : XXVIII
கலித்தொகை நூற்றிஐம்பது

கலித்தொகை :

இத்தொகை நூல், பழைய தமிழ் இலக்கிய மரபில் வந்த கடைசிகாலப் பாடல்களைக் கொண்டதாம். இத்தொகை நூலில் தொகுக்கப் பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்தும், தமிழ் நாட்டுக்கோயில்களில், ஏதேனும் ஒன்றில் கோயில் கொண்டிருக்கும் சிவன் அல்லது விஷ்ணுவின்பால் கொண்ட பக்தியால், அகத்துாண்டுதல் பெற்றுப் பாடப்பெற்ற அக்காரணத்தால், சமஸ்கிருதத்திலிருந்து பெற்ற கடனால் முழுக்க ஆழ்ந்து போன சொற்களால் ஆன, புதுவகைப் பாடல்களால், பழைய அகத்துறைப் பாடல்கள் துரத்தப்பட்டு, வழக்கற்றுப் போன கி. பி. ஆமாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாம். பிற்பட்டகாலத்தில் பாடப்பெற்ற, கோவை என அழைக்கப்படும் ஒரு சில அகத்துறைப் பாடல்கள், அகத்துறைப் பாடல்கள் என்ற தகுதி அளவில், தமிழ் இலக்கியமரபினையும், தொல்காப்பியம் மற்றும் பிற்கால இலக்கண நூல்களின் இலக்கண மரபுகளையும் பெயரளவில் பின்பற்றுகின்றன என்றாலும், தம்பாடற்பொருளாக, ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையிலாம் மக்கள் காதலைக் கொள்ளாமல், ஒரு பக்தன் காதலியாக, அப்பக்தன் அன்பு செலுத்தும் இறைவன் காதலனாக வரும் தெய்வக்காதலையே கொண்டுளது. ஒருவன் ஒருத்திக்கும் இடையிலான மக்கள் காதலைப்பாடும் அகத்துறைப் பாடல்கள், அறவே அழிந்து போய்விடவில்லை என்றாலும், அவை, பண்டைய இயற்கையோடு இயைந்த உண்மைப் பாடல்களோடு முற்றிலும் மாறுபட்டு, வலிந்து பாடப்பெற்ற காதல் பாடல்களாக நிலை தாழ்ந்து போய்விட்டன.