பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை நூற்றிஐம்பது

361


கடுங்கோ, பின்வருமாறு விளக்கியுள்ளார். "பிற ஒன்றிற்கு இல்லாத பெருமையைத் தனக்கே உரித்தாக்கிக்கொண்ட இவ்வுலகத்தின் பேரழகைத், தான் காண வேண்டி, ஆறு கண்களை விழித்துப் பார்ப்பதுபோல், பக்கத்தில் உள்ள குளங்கள், நிறைந்த நீர்ப்பூக்கனால் அழகு பெறவும், பளிங்கு மண் போதும் கண்ணாடிக்குள், பவழம் அழுந்தப்பட்டுத் தோன்றினாற்போல், முருக்க மலரின் இதழ்கள், அழகிய குளங்களில், சாம்பற்று விழவும், அழகிய குளங்களின் நிழல் நோக்கிச் சென்று, வண்டுகள் ஆரவார்க்கவும், மரங்கள் எல்லாம் அரும்புகள் மலர்ந்து, மணிகளைச் சூடினாற்போல மலர்களால் நிறையவும், காதல் இருவரின், ஒருவரையொருவர் தழுவிக் கிடந்த கைகள் நெகிழாதிருக்க, மலர்த்தாதுக்களைத் துாவும் இளவேனிற் பருவம் வந்துவிட்டது."

"வீறுசால் ஞாலத்து வியல் அணி காணிய,
ஆறுகண் விழித்ததுபோல் கயம் நந்திக்கவின் பெற,
மணிபுரை வயங்கலுள் துப்பெரிந்தவை போலப்
பிணிவிடு முருக்கிதழ் அணிகயத்து உதிர்ந்து உகத்
துணிகயம் நிழல் நோக்கித் துதையுடன் வண்டு ஆர்ப்ப,
மணிபோல அரும்பு ஊழ்த்து மரமெல்லாம் அவர் வேய
காதலர்ப் புணர்ந்தவர் கவவுக்கை நெகிழாது

தாதுஅவிழ் வேனிலோ வந்தன்று."
- பாலைக்கலி : 32 : 1.8.

இளமகள் ஒருத்தியைப், புலவர் கபிலர், இவ்வாறு வர்ணித்துள்ளார் : "ஒளிவீசும் மின்னலின் நுண்ணிய பிளவுகளுக்கிடையே நுழைந்தோடும் கார் மேகம் போல, பொன்னைக் கூறுபடுத்திப் பண்ணிய அழகிய கம்பிகளை, ஐந்து பகுதியாகப் புனையப்பட்ட கூந்தல் இடை இடையேவிட்டு, தாழம்பூவினைத் துண்டுத் துண்டாக வகிர்ந்து, இடையிடையே இட்டுத் தொடுத்த, மணம் நாறும் மாலையினையும், இனிய புன்னகையினையும், ஒளிவிடும் வெண் பற்களினையும், இனிய மொழியினையும், இயல்பாகவே,