பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை நூற்றிஐம்பது

367


மலையைப் பாடிய பின்னர்த் தலைவியும், தோழியும், தலைவனை, மாறி மாறிப் புகழ்ந்தும், பழித்தும் வள்ளைப் பாட்டு உருவில் பாடுவர்.

"தோழி! நீ வாழ்க ; நம் மீது அன்பு கொண்டும், அருள் காட்டாதிருக்கும் தன் செயலுக்கு நாணாதவனுக்கு உரிய நாட்டில் உள்ள மலையாய் இருந்தும், பக்க மலைகளில் தாழ்ந்து ஓடும், ஒளிதரும் வெண்ணிற நீர்த் திவலைகள் சிதறும் அருவிகளைக் கொண்டிருக்கிறதன் காரணத்தை ஆராய்ந்து காண்போம் வருக !" எனப்பாடி, தோழி, தலைவனைப் பழித்தாள்.

ஒரு பக்கம் சாய்ந்து விடாது, நடுவிடத்தே நிற்கும் நாவினையுடைய துலாக்கோல் போல், வேண்டுவார், வேண்டாதார் என எண்ணி, ஒருவர் பால்சாய்ந்து விடாது நடுநிலையில் நின்று ஆராய்ந்து அறமே செய்யும் நல்ல உள்ளம் உடைய நம்தலைவன், தன்னால் அன்பு செய்யப்பட்டவருடைய நெஞ்சம் அழிந்து போக விடமாட்டான்" எனத் தலைவி புகழ்ந்து பாடினாள்.

நம்மீது அன்பு கொண்டிருந்தும், மணந்து இல்லறம் மேற்கொண்டு இல்லறப் பயனை நுகர எண்ணாமல், பயனிலவே எண்ணியிருப்பான் மலையாயிருந்தும், பொன்னாரம் பல அணிந்த யானைகள் போல, குளிர்ந்த நல்ல மணம் தரும் கோங்கு, மலர்களால் நிறைந்து காட்சி அளிக்கின்றதே! என்ன காரணம் எனத் தோழி, தலைவனைப் பழித்துப் பாடினாள்.

தான்வழங்கும் கொடைப்பொருளை விரும்பி வருவார்க்கெல்லாம் தேர்களையே வழங்கும் வளமான கைகளைக் கொண்ட நம் தலைவன், தன் மலையருவி நீரிலும் மென்மையுடையவன் ஆவன். அத்தகையான், வரைந்து கொள்ளாது இருந்து பிரிவுநோய் நம்மை வருத்தவிடுவனோ ? வருத்த விடான் உறுதியாக" எனத் தலைவி, தலைவனைப் புகழ்ந்து பாடினாள்.{{Nop}}