பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

தமிழர் வரலாறு

முழுமையாக ஆரியமயமாகிவிட்ட காஞ்சி மாவட்டத்தில்தான் இயலும்; ஆதலின், மேலே கூறிய கூற்று முழுக்க முழுக்க உண்மையாதல் கூடும். ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வைஷ்ணவ, சைவ பெளத்த, சமணங்களாகிய ஆரியச் சமயங்கள், பழந்தமிழ்ச் சமயங்களை விரைந்து இடமிழக்கச் செய்துவிட்டன: அல்லது அவற்றின் இடையே நுழைந்து இடங்கொண்டுவிட்டன. தொடக்க காலத்தில், எந்தச் சமய நெறியும் அரசாதரவு பெறவில்லையாகவே, ஒன்றோடொன்று பெருமளவில் பகைத்துக் கொள்ளவில்லை. ஆகவே தான், திருவள்ளுவர், மற்றும் பதினெண்கீழ்க் கணக்கைச் சேர்ந்த ஒழுக்க நெறிகூறும் ஆசிரியப் பெருமக்களால், ஆரியச் சமயக் கொள்கைகள், ஆரியச் சமயத் தத்துவக் கொள்கைகளைக் கலவாமல், தனி ஒழுக்க நெறிகளையே உணர்த்த முடிந்தது. ஆகவேதான், எந்த ஒரு சமயச்சாயலைத் திருவள்ளுவர் ஆதரிக்கிறார் என்பதைத், தன்னைப் படிப்பவர்க்கு வெளிப்படுத்திக்கொள்ளாமலே, ஒழுக்க நெறி கற்பிக்கும் உலகப் பேராசிரியர்களில், தலைசிறந்தவராகத் திருவள்ளுவர் ஒளிவீசுகிறார். பிராமணன் முதல் பறையன் ஈறாக உள்ள ஒவ்வொரு சாதியும், வைதீக அல்லது அவைதீக நெறிக்கு நேர் எதிரான ஒவ்வொரு சமய நெறியும், இவ்வொழுக்க நெறிப் பெரும் புலவனைத் தம்முடைய வலையுள் கொண்டுவிடும் பெருமைக்கு உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் திருவள்ளுவரோ, அவ்வாறு அடையாளம் காட்டப் படுவதை இக்காலமெல்லாம் பெருமிதத்தோடு மறுத்தே வந்துள்ளார்.

திருவள்ளுவர் பிறப்புக் குறித்தும், அவர் நூல் வெளியீடு குறித்தும், அறிவுக்குப் பொருந்தாக் கற்பனைக் கதைகள் கட்டிவிடப்பட்டுள்ளன. அவர் நூல், மூன்றாவது சங்கத்தின் முன் வைக்கப்பட்டபோது அச்சங்கப் புலவர்கள், அதை ஏற்க மறுத்தனர் எனக் கூறுகிறது இரண்டாவது கற்பனைக் கதை ஒரு குளத்தில் மிதந்து கொண்டிருந்த ஒரு பலகை மீது அப்புலவர்கள் அமர்ந்திருந்தனர். திருக்குறள் அப்பலகை மீது வைக்கப்பட்டதும் அப்பலகை திருக்குறளுக்கு