பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392

தமிழர் வரலாறு

சிலப்பதிகாரம்:

தமிழில் எழுதப்பெற்ற முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம், காப்பியவடிவம், சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கப் பெற்றது. ஆனால் கருப்பொருளைப் பொருத்த மட்டில், முழுக்க முழுக்க முதல் நூலாம். நாம் இப்போது பெற்றிருக்கும் இந்நூல், நூலாசிரியர் கைகளால் அல்லாமல், பிற்காலத்தவர் கைகளால் எழுதப்பெற்ற, எண்ணற்ற, பாயிரம் போலும் முகப்புரைகளாலும், முடிப்புரைகளாலும், இடையிடையே நிரப்பப் பெற்றுளது. மூன்றாம் காண்டத்தில் கூறப்பட்டிருக்கும் செய்தியோடு, உரைபெறு கட்டுரைக் கூற்று மாறுபடுகிறது என்பது முன்பே எடுத்துக் காட்டப்பட்டுளது. [அதிகாரம் : 20] நூலின் மூலம் தானும், எந்தப் பாண்டியனுடை அறிவிலாச் செயல், அந்நூலின் உச்ச உணர்ச்சி நிலைக் கட்டமாம் மதுரை அழிவினைக்கொண்டுவந்ததோ, அந்தப் பாண்டியன் பெயரைக் கூறவில்லை. ஆனால், இரண்டாம் காண்டத்தின் இறுதியில் கூறப்பட்டிருக்கும் கட்டுரைதான், அவனை, ஆரியப் படையினை வென்றவனும், புறநானூறு 183-ஆம் செய்யுனைப் பாடியவனும் ஆகிய நெடுஞ்செழியனாக அடையாளம் காட்டுகிறது. ”வடஆரியப் படைகளை வென்று, தென் தமிழ்நாடு முழுவதும் ஒரு குடைக் கீழ் வரக்கண்டு, குற்றம் தீர்ந்த கற்பினளாகிய அரசமாதேவியோடு, அரியணையில் இறந்து போன பாண்டியன் நெடுஞ்செழியன்” எனக் கூறுகிறது.

“வடஆரியர் படை கடந்து
தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்,
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்

நெடுஞ்செழியன்”
--சிலம்பு:காண்டம்: 2: கட்டுரை: 14—18