பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

415


செங்குட்டுவனுக்கு ஏற்றிக் கூறியுள்ளார் எனத் திரு. அய்யங்கார் கூறுவதில் உண்மையில்லை. பதிகத்தில் கூறப் பட்டிருக்கும் கொடுகூர் எறிதல், வஞ்சிக் காண்டத்தில் இடம் பெறவில்லை; பதிகத்தில் இடம் பெறாத, தாயைக், கங்கையில் நீராட்டியது வஞ்சிக் காண்டத்தில் மட்டுமே கூறப் பட்டுளது:

பரணர், செங்குட்டுவன் தந்தையாம், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனையும் பாடியவர். ஆரிய அரசரை வென்று, இமயத்தே வில் பொறித்த நிகழ்ச்சியை அகத்திலும், “ஆரியர் அலறத் தாக்கிப், பேரிசை தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித் தோன் வஞ்சி’ -(395); அவன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு, அவனோடு ஒரு சேரத்தானும் இறந்து கிடந்த காட்சியைக் கண்ணிர் மல்கப் புறத்திலும், “வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்: இனியே. என்னாவது கொல்......அவர் அகன்றலை நாடே.” (63) பாடியுள்ளார். ஆகவே. பரணர், செங்குட்டுவன் தந்தையினும் மூத்தவரோ, அல்லது சம வயதுடையவரோ ஆதல் வேண்டும்:

கண்ணகி சிலைக்காம் கல் கொணர்ந்தபோது செங்குட்டுவன் ஐம்பது ஆண்டு நிரம்பப்பெற்று, நரை முதிர் யாக்கையாைகி இருந்தவன். ‘'வையங்காவல் பூண்ட நின்நல் யாண்டு ஐயைத்து இரட்டி சென்றது’ (நடுகல் காதை 129-30) என மாடல மறையோன் கூறுவது காண்க. அரியணை ஏறி ஐம்பது ஆண்டுகள் கழிந்ததாகவும் கொள்ளலாம். அது வரையும், பரணர் வாழ்ந்திருந்து, அவன் தாயைக் கங்கையில் நீராட்டியது, கண்ணகி சிலைக்காம் கல் கொணர்ந்தது ஆகிய நிகழ்ச்சிகளை அறிந்திருப்பார் என எதிர்பார்ப்பது அறியாமை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மறைவுக்குப் பின்னர்ச் சில காலமே அவர் வாழ்ந்திருக்கக் கூடும். அந்தச் சில ஆண்டு அளவில், செங்குட்டுவன் செயல்களாக, கடல்