பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

425


அதுபோலவே, வஞ்சிக்காண்டம், செங்குட்டுவனின் பெருமை பேராற்றல்களைக் கூறுவனவேயாயினும், அவை, கண்ணகியின் காற்சிலம்போடு தொடர்பிலாக் கடம் பெறிதல், பழையன் வேப்பின் வெட்டி அழித்தல், நேரிவாயிலில் சோழர் ஒன்பதின்மரை வீழ்த்தல் போலும், செங்குட்டுவனின் பிற பெருஞ்செயல்கள் போல் அல்லாமல், அக்கண்ணகி நல்லாளுக்குக் கோயில் கட்டி வழிபடுவதாம், சிலம்புக்கு உரியவளோடு தொடர்புடைய பெருஞ் செயல்களாம் ; ஆதலின், அவையும் சிலப்பதிகாரத்தின் அங்கமே ஆம்.

மேலும், வஞ்சிக் காண்டத்து ஏழு காதைகளுமே, செங்குட்டுவன் புகழ் பாடுவன அல்ல. முதல் காதையாம் குன்றக்குரவை, செங்குட்டுடன் புகழ் பாடவில்லை. மாறாக, கண்ணகி, கணவனோடு கடவுளாகி விட்ட காட்சியைக் கண்ணாரக் கண்ணுற்ற குரவர், அவள்பால் கொண்டுவிட்ட தெய்வ அன்பு காரணத்தால் மகிழ்ந்து பாடி ஆடியதைக் கூறுவது. ஆகவே, அதைச், சிலப்பதிகாரத்தின் அங்கம் ஆகாது என ஒதுக்கி விடுவது இயலாது : அது போலவே, வாழ்த்துக் காதை, வரந் தருகாதைகளும் செங்குட்டுவன். புகழ்பாடுவன அல்ல : கண்ணகியின் விழாவின் காட்சி நலம், அது காண வந்தவர் பெற்ற பேறு நலங்களைக் கூறுவன. ஆகவே, அவற்றையும், சிலப்பதிகாரத்து அங்கம் ஆகா, என ஒதுக்கி விடுவது ஒரு போதும் இயலாது. இவற்றிற்கு இடையில் வரும், காட்சிக்காதை, கால்கோள் காதை, நீர்ப் படை. காதை, நடுகல் காதைகளும், செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பைப் பாடுகின்றன என்றாலும், அவ்வடநாட்டுப் படையெடுப்பு, கண்ணகி சிலைக்காம் கல் கொணர்வதற்காகவே மேற்கொண்ட படையெடுப்பு: ஆகவே, அவையும், சிலம்போடு தொடர்புடையவே, -

ஆகவே, வஞ்சிக் காண்டம், சிலம்போடு தொடர்பிலாச். செங்குட்டுவன் புகழ் பாடுகிறது ; ஆகவே, அது, சிலப்பதிகாரத்தின் பகுதியாகாது என்பது எவ்வகையிலும் பொருந்தாது.