பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

439


அதே சோழநாட்டில், இடும்பாவனத்தில் மிகப்பெரிய போரில் கடுமையாகப் போரிட்டு பெரும் வெற்றி பெற்றது.

செங்குட்டுவன் பெற்ற வெற்றிகளாக அறியப்படும் இவ்வேழனுள்ளும், கடல் பிறக்கோட்டிய நிகழ்ச்சி, பெரும் புலவர் பரணர், அவனைப் பாராட்டிப் பாடிய ஐந்தாம்பத்தின் பல பாடல்களில் எடுத்துக் கூறியது போதாது என உணர்ந்து அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும், எடுத்துக் கூறிப் பாராட்டுமளவு புகழ்வாய்ந்த பெருஞ்செயலாம். செங்குட்டுவன் புகழ் பாடுவதற்காகவே பாடப்பட்டது வஞ்சிக்காண்டமாயின், அதில் இச்செயல் எடுத்துக்கூறிப் பாராட்டப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதில் இடம்பெறவில்லை.

அஃது ஒழிந்த ஏனைய ஆறும், வஞ்சிக் காண்டத்தில் கூறப்பட்டுள்ளன ஆயினும் அவை, ஆங்காங்கே சிறுசிறு குறிப்பாம் அளவில்தான் கூறப்பட்டுள்ளனவே ஒழிய, கல் கொணர்ந்த நிகழ்ச்சி போல் விரிவாகக் கூறப்படவில்லை.

மேலும், செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பைப் பாடுவதே வஞ்சிக் காண்டத்தின் குறிக்கோளாயின், கண்ணகிக்குக் கல்கொணரச் செல்வதற்கு முன்னர்த் தன் தாயின் படிமத்தைக் கங்கையில் நீராட்டச் சென்று, கங்கைக் கரையில் வந்து எதிர்த்த ஆரிய அரசர் புலரை ஒருசேர வென்ற செங்குட்டுவனின் முதல் வட நாட்டுச் செலவையே, அது விரிவாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது, அவ்வாறு கூறப்படாமல், எங்கோ ஒரிடத்தில் செங்குட்டுவனின் பல்வேறு பெருஞ்செயல்களுள் ஒன்றாகவே அறிவிக்கப்பட்டுளது.

ஆக, எந்தக் கோணத்திலிருந்து நோக்கினும், வஞ்சிக் காண்டம், செங்குட்டுவன் வெற்றிபாடும் வீரகாவியமல்லது வேறு நோக்குடையது அன்று என்ற, அய்யங்கார் அவர்களின் கூற்றில் வலுவில்லை என்பதே உறுதியாகிறது.