பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபதாம் அதிகாரத்தின் பின் இணைப்பு: 1

கரிகால் பெருவளத்தான் சிலப்பதிகாரக் காலத்தவனா !

சிலப்பதிகாரத்தில், சோழ அரசரைப் பற்றிய குறிப்பு பதினான்கு இடங்களில் வந்துள்ளன என்றாலும், அவற்றுள், கரிகாற் பெருவளத்தான் பெயர். மூலத்தில், மூன்று இடங்களில் மட்டுமே வந்துளது. அவ்வாறு குறிப்பிடப்படும் அவ்விடங்களிலும், கரிகாலன், சிலப்பதிகார நிகழ்ச்சியோடு தொடர்பு படுத்தும் நிலையிலும் கூறப்படவில்லை. கிலப்பதிகார நிகழ்ச்சி நடைபெற்ற காலத்தவனாகவும் கூறப்படவில்லை.

"இருநில மருங்கில் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்,
வாளும், குடையும், மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுக, இம்
மண்ணக மருங்கின் என் வலிகெழு தோள்எனப்
புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள்";

-இந்திர விழவுர் எடுத்த காதை : 89 - 94,

இது, திருமாவளவனுடைய வடநாட்டுப் படையெடுப்புப் பற்றிக் கூறுகிறது. அது, சிலப்பதிகாரக் காலத்துக்கு முந்திய நிகழ்ச்சி என்பதைப், "புண்ணிய திசைமுகம்" போகிய "அந்நாள்" என்ற தொடரில் வரும் "போகிய" என்ற இறந்த காலவினையும், "அந்நாள்" என்ற சேய்மைச் சுட்டும் உறுதி செய்வது காண்க. ஆக, இத் தொடரில் இடம் பெற்றிருக்கும் திருமாவளவன், சிலப்பதிகாரக் கதை நிகழ்காலத்தவன் அல்லன் என்பது உறுதியாகிறது.{{Nop}}