பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழி பெயர்ப்பாளர் முன்னுரை

சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையில் பணியாற்றிய திருவாளர் பி.டி.சீனிவாச அய்யங்கார் அவர்கள் ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய தமிழர் வரலாறு (History of Tamils) என்ற நூல், கி.பி.600 வரையான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றினை விளக்கும் அரிய நூலாகும்.

பல்கலைக்கழக நிலையில், தமிழ்த்துறையில் எம் ஏ. பட்டப்படிப்பிற்குப், பயிலும் மாணவர்கள், தமிழர் வரலாறு அறிய மிகப்பெருமளவில் துணைநிற்பதான அந்நூல், தமிழில் இல்லாது ஆங்கிலத்தில் அமைந்திருப்பது, தமிழ்த்துறை மாணவர்கள், அந்நூலைப் படிப்பதற்குத் தடையாக இருந்துவிட்டது. அத்தகு இடர்ப்பாட்டிற்கு உள்ளானவர்களுள், நானும் ஒருவன். அதனால், அந்நூல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவரின், தமிழ், தமிழர், தமிழ்நாடு, பற்றிய வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் முதற்பகுதி முன்னுரையில் கூறியன போலும், தவறான கருத்துக்கள் அறவே நீக்கப்பட்டு, தமிழர் வரலாற்றை உள்ளது உள்ளவாறு உணர்த்தும் சிறந்த வரலாற்று நூலாம் விழுமிய பெருமையினை இந்நூல் பெற்றுவிடும் என உணர்ந்தேன்.

அதையொட்டி, நூலை மொழிபெயர்த்ததோடு நில்லாமல் ஆசிரியரின் தவறான முடிவுகள் சிலவற்றினை ஏற்ற சான்றுகள் காட்டி மறுத்து, அந்தந்த அதிகாரங்களின் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளேன். நான் விட்டுச்செல்லும் பணியியை, இந்நூலைப் படிக்கும் வரலாற்று மாணவர்கள், தொடர்ந்து முடிப்பார்கள்; முடிக்க வேண்டும் என்பதால் அத்தவறான முடிவுகளில் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதோடு விட்டுச் செல்கின்றேன்.