பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 தமிழர் வரலாறு

என்ற பொதுப் பொருள் உணர்த்தவல்லதேயல்லது, உரை யாசிரியர் கொண்டதுபோல், கரிகாலனைத் தனித்துக் குறிக்க வழங்கப்பட்ட சொற்றொடர் அன்று.

  பழந்தமிழ் மக்கள், அவர்கள் எந்நிலத்து மக்களே ஆயினும், அந்நிலத்துக்குரிய கடவுளர்க்கு விழா எடுத்து, அக்கடவுளர்தம் பெருமைகளைப் பாராட்டிப் பாடி மகிழும் நிகழ்ச்சிகளின் முடிவிலும், அதேபோல் கடலாடல்போலும் இன்ப விளையாடல்கள்போதும், அகத்துறை நலம் சிறக்கப் பாடிக் களிக்கும்போதும், இறுதிப்பாட்டு, அந்நாடாளும் மன்னன் பெருமை கூறி வாழ்த்தும் பாட்டாகவே அமையும் ; அவ்வாறு பாராட்டப் பெறும் அரசன், அப்போது அரியணையில் இருப்போனாக இருக்கவேண்டும் என்று கொள்ளாமல் அக்குல முன்னோனாகவும் இருப்பன்; இது மரபு.

  இந்திர விழா மேற்கொள்ளும் புகார் நகரத்து மக்களோடு கடற்கரைக்குச் சென்று, கானல்வரி பாடி மகிழுங்கால், பாட்டின் கருப்பொருளாக அமைந்துவிட்ட அகப்பொருள் காரணத்தால் கருத்து வேறுபாடுற்றுக் கோவவன், மாதவியை விடுத்துப் போய்விட, மாதவியும் தனித்தே தன் மனைபுகுந்த கொடுமையைப் பாடி முடித்த இளங்கோவடிகளார், இறுதி யாக, சோணாட்டு வேந்தன் வெண்குடைச் சிறப்பைப் பாடி வாழ்த்துங்கால், அக்காலை அரசாண்டிருந்த சோழ அரசனின் இயற்பெயர் கூறிப்பாராட்டாது, "செம்பியன்" எனச், சோழர் குலத்தவரைக் குறிக்கும் பொதுப் பெயரே கூறிப் பாராட்டி யிருப்பது காண்க,

“மாயிரும் ஞாலத்து அரசுதலை வணக்கும்

சூழி யானைச் சுடர்வாள் செம்பியன் மாலை வெண்குடை கவிப்ப

ஆழி மால்வரை அகவையான் எனவே”.

-கானல்வரி: