பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

87


செங்குட்டுவன், கண்ணகி சிலைக்காகக் கனகவிசயர் முடி மீது கொணர்ந்த கல்லைக், கங்கையில் நீராட்டி, அக்கங்கையின் தென்கரையில் பாடி கொண்டிருந்த காலை, கங்கையாடப் போந்த மாடலன், கொற்கைக் கோமான், கண்ணகிக்கு விழா எடுத்த செய்தியைக் கூறினான்:

 "கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்
பொன்தொழில் கொல்லர் ஈரைஞ் நூற்றுவர்
ஒரு முலை குறைத்த திருமாபத்தினிக்கு
ஒரு பகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி."

-சிலம்பு : 27:127-130


ஆகவே, செங்குட்டுவன், வஞ்சியில் கோயில் எடுத்து விழாக் காண்பதற்கு முன்னரே, தமிழ் நாட்டவர், கண்ணகிக்கு விழா எடுத்து விட்டனர் என்பது தெளிவாகிறது.

தமிழகத்துப் பேரூர்களில், பத்தினிப் பெண்டிர்க்குக் கோயில் கட்டி வழிபடும் வழக்கம் பண்டே இருந்தது என்பதை, மணிமேகலையில் வரும் பின்வரும் வரிகளே உணர்த்துகின்றன:

"ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்காயினும்,
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்".

-மணி : 6 : 55-59


இவ்வகையால், சோணாட்டுத் தஞ்சையில் இருந்த பத்தினிக் கோட்டம் ஒன்றிலிருந்து, அத்தெய்வத்துக் காலணியாம் சிலம்பினைக், கயவாகு, கொணர்ந்திருத்தல் கூடும்;

மேலும், கயவாகு, சோணாட்டின் மீது படையெடுத்துச் சென்று வென்று திரும்பிய அச்செய்தியைக் கூறும் அதே இலங்கை வரலாற்று நூல், அப்படையெடுப்பிற்குக் காரணமாம் முன் நிகழ்ச்சி ஒன்றையும் கூறியுள்ளது.