பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தமிழர் வரலாறு

கரிகாலன், இலங்கை மீது படையெடுத்துச் சென்று, ஆங்குப் போரில் தோற்ற பல ஆயிரம் வீரர்களைக் கைப்பற்றிக் கொணர்ந்து அவர்களைக் கொண்டு காவிரிக்குக் கரை அமைத்தான் எனவும், இலங்கை அரசன் கயவாகு, நள்ளிருள் யாமத்து நகர்சோதனை செய்துவருகின்றபோது, நரைத்த முதுமகள் ஒருத்தி, பெருங்குரற் பாய்ச்சி அழக்கண்டு, அன்னவள் இன்னலுக்கு ஏது, பன்னெடு நாளைக்கு முன்னர்ப் படையெடுத்துப் போந்த கரிகால் வளவன் சிங்களக் குடிகள் பலவற்றைச் சிறைப்படுத்திச் சென்றானென்று, தன் குடிக்கு ஒருமகனையும், கொண்டு போயினமையே எனக் கேட்டுச் சோணாட்டின் மீது படையெடுத்து வந்து, தன் நகர்க் குடிகளைச் சிறையினின்றும் விடுவித்தனன என்றும் கூறுகிறது Wpham’s Mahavamsum Vol. 1 Page : 228).

செங்குட்டுவன் வழிபட்ட கண்ணகி, போற்றிய கற்புடை மகளிர் எழுவரில், கரிகாலன் மகளும் ஒருத்தி: ஆகவே செங்குட்டுவனுக்குக் காலத்தால் முற்பட்டவன் கரிகாலன், செங்குட்டுவன் - காலத்தவன் கயவாகு, ஆகவே, கரிகாலன் இலங்கைப் படையெடுப்பு. கயவாகு காலத்திற்கு முற்பட்டதாதல் வேண்டும். அப்படையெடுப்பால் இ ல ங் ைக நாட்டவர்க்கு ஏற்பட்ட இழுக்கைத் துடைக்கவே, சோணாட்டின் மீது கயவாகு படையெடுத்தான். அப்படையெடுப்பு, செங்குட்டுவன் காலத்திற்குப் பின்னரே நிகழ்ந்திருக்க வேண்டும். செங்குட்டுவன் காலத்தில், சோணாட்டு அரியணையில் இருந்தவன் அவன் மைத்துனனாகிய கிள்ளி வளவன். அவன் அரசுரிமையைப் பொறாது, அவனோடு மாறுபாடு கொண்ட, சோழர் குலத்து இளவரசர் ஒன்பதின்மரைச் செங்குட்டுவன் வென்று அடக்கினான் என்கிறது சிலம்பு

 மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் .
இளவரசு பொறா அர். ஏவல் கேளார்
வள்நாடழிக்கும்மாண்பினராதலின்