பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14. அமுத சுரபி[1]


ளவேனிற் காலம், இளங்காற்று, இனிமையாக வீசுகின்றது. நீலவானத்தில் நிறைமதி எழுந்துவருகின்றது. இன்பமயமான அவ்வேளையில் மணிபல்லவம் என்ற தீவகத்தில் காட்சி தருகின்றாள் ஒரு மங்கை.

மணிமேகலை என்னும் பெயருடைய அந்நல்லாள் வெண் மணற்குன்றுகளையும், விரிபூஞ் சோலைகளையும் கண்டு வியந்து உலாவுகின்றாள். நன்மணம் கமழும் பூஞ்சோலையின் அருகே,

"மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய

கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி”

அவள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது. அத் திருக்குளத்தின் தெள்ளிய அலைகளில் வெண்ணிலாவின் ஒளி கலந்து விளையாடும் காட்சியையும், கண் போல் மலர்ந்த கருங்குவளையின் செவ்வியையும் கண்டு மனங்குளிர்ந்து நிற்கின்றாள் மணிமேகலை.

அப்போது அப் பூம்பொய்கையின் அலைகளிலே மிதந்து, கரையை நோக்கி வருகின்றது ஒரு திருவோடு. தன்னை நோக்கித் தவழ்ந்து வந்த திருவோட்டைத் தலை வணங்கி, மலர்க் கரத்தால் எடுக்கின்றாள் மணிமேகலை. அத் திருவோடுதான் அமுதசுரபி; எடுக்க எடுக்கக் குறையாமல் உணவு கொடுக்கும் உயரிய


  1. அமுத சுரபி' என்னும் தமிழ் மாதப் பத்திரிகையின் தலையங்கமாக எழுதப்பட்டது.