பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தமிழ் இன்பம்


யால் அழுங்கிய தோற்றமும் நகைச்சுவை பயப்பனவாகும். ஆகவே, மங்கை புனைந்திருந்த மணியாடையின் சிறப்பையும், அம் மணிகள் கதிரவன் ஒளியால் சுடர் உமிழ்ந்த செம்மையையும் சிந்தாமணிக் கவிஞர் அழகுற உணர்த்திப் போந்தார்.

மலர்ப் பொய்கையின் அழகையும் மெல்விய, பூங்காற்றின் இனிமையையும் நுகர்ந்து, நெடுநேரம், மங்கை நீராடுவாளாயினாள்; பொய்கையிலே இயற்கை இன்பம் நுகர்ந்த நிலையில் வீட்டையும் மறந்தாள்; தன்னோடு போந்த பஞ்சரக் கிளியின் பசியையும் மறந்தாள். இவ்வாறு தன்னையும் மறந்து தாமரைத் தடாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த மங்கையைக் கரையேற்றுதற்கு ஒரு சூழ்ச்சி செய்தது அவ் விளங்கிளி. தன்னைக் காதலித்து வளர்த்த தலைவியை நோக்கி, 'பாம்பு, பாம்பு' என்று பதறிக் குளறிக் கூறிற்று. பாம்பு என்ற சொற்கேட்ட மங்கை மனம் பதைத்துக் காதில் அணிந்த தோடு கழல, விரைந்தோடிக் கரை சேர்ந்தாள். இந்நிகழ்ச்சியை ஒரு சொல்லோவியமாக எழுதி அமைத்தார் சிந்தாமணிக் கவிஞர்.

"தீம்பாற் பசியி னிருந்த
செவ்வாய்ச் சிறுபைங் கிளிதன்
ஒம்பு தாய்நீர் குடைய
ஒழிக்கும் வண்ணம் நாடிப்
பாம்பா மென்ன வெருவிப்
பைம்பொன் தோடு கழலக்
காம்பேர் தோளி நடுங்கிக்
கரைசேர் பவளைக் காண்மின்"

என்பது அவர் பாட்டு,