பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை இன்பம்

107


நிறைந்து விளங்குகின்றான். நீரிற் பூக்கும் குமுத மலர்களை நீ மலர்விக்கின்றாய்; முருகனோ அன்பருடைய மனமலர்களைத் திறக்கின்றான். எனவே, உன்னினும் அவன் உயர்ந்தவனல்லனோ! அன்னான் 'வருக' என்றழைத்தால் நீ வாராதிருக்க வழக்குண்டோ?" என்று முனிவர் இடித்துரைத்தார்.

இவ்வாறு வேற்றுமை காட்டிக் கட்டுரை கூறியும், முருகன் பெருமையை உணராது இறுமாந்திருந்த தண்மதியைப் பிறிதோர் உபாயத்தால் முனிவர் தெருட்டக் கருதினார்; "மறுவுற்ற குளிர் மதியே! உன்னை வருந்தி அழைக்கும் குமரன் திறத்தினை அறிந்தா யில்லையே! கருநோயை வேரறுக்கும் முருகன் அருள் பெற்றால், உன்னைப் பற்றியுள்ள கரு நோய் கடுகி ஓடுமே இருள்சேர் இருவினையுந் துடைத்து, அந்தமில் இன்பத்து அழியா வீடும் தரவல்ல முருகனுக்கு உன்பால் அமைந்த மறுவினை அகற்றுதல் அரிதாமோ! கரவாது தொழும் அன்பர் கண்ணெதிரே தோன்றித் தண்ணளி சுரந்து, வரங்கொடுக்கும் கண்கண்ட தெய்வம் முருகனல்லால் உலகில் வேறுண்டோ?” என்று செம்பொருளாய குமரன் பெருமையைச் செவ்வனம் அவர் உணர்த்தினார். எனினும், முனிவர் பரிந்துரைத்த மொழிகளை வெண்மதி மனத்திற் கொள்ளவில்லை.

சாம, பேத தானங்களால் தண்மதியை வெல்ல இயலாத முனிவர் தண்டத்தைக் கையாளத் தலைப்பட்டார்; 'குறையாகிப் பிறையாகி மிளிரும் குளிர்மதியே! இக்குமரன் ஆற்றலை நீ அறியாய் போலும்! இப்பிள்ளைப் பெருமான் குன்றமெறிந்தான்; குறை கடலிற் சூர் தடிந்தான்; குலிசனைச் சிறையி