பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17. பயிர் வண்டும் படர் கொடியும்

திருக்குற்றால மலையின் ஒருசார் ஓங்கி வளர்ந்த வேங்கைமரம் விண்ணளாவி நின்றது. அதன் கிளைகளில் ஒரு மெல்லிய பூங்கொடி பின்னிப் படர்த்திருத்தது. மஞ்சு தோய நின்ற வேங்கையின்மீது அவ்வினங்கொடி வரிவரியாய்ச் சுற்றி விளங்கிய கோலம், கண்டோர் கண்ணையும் கருத்தையும் கவர்வவதாயிற்று. பொன்மலர் பூத்த அவ்வேங்கையின் கொம்புகளில், குயில்கள் மணந்து மகிழ்ந்தன; வண்டினங்கள் இசைபாடி நறுமலர்களின் தேனை மாந்தித் திளைத்தன.

"தீங்கு யில்ம ணந்துதேன் துஞ்ச வண்டு பாண்செய
வேங்கை நின்று பொன்உ குக்கும்”

என்று சிந்தாமணிக் கவிஞர் வியந்துரைத்த இயற்கையழகு அங்கே காட்சியளித்தது.

அவ் வேங்கை மரத்தின் அடிப்புறத்தில் ஆழ்ந்து அகன்ற ஓர் ஆறு அணிபெறச் சென்றது. இளங்காற்றில் வேங்கையின் பூங்கொம்புகள் அசைந்து ஆற்றிலே பொன்மலர் சொரிந்தன. சிறு திரைகள் ஆற்றில் அலைந்து இனிய காட்சியளித்தன.

அப்போது சேய்மையில் ஒல்லென ஓர் ஒலி கிளம்பியது. அதன் தன்மையை மனத்தாற் கருது