பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தமிழ் இன்பம்


அதைக் கண்ட திருத்தொண்டர் தலைவருக்கு ஆத்திரம் பொங்கிற்று. மீண்டும் பரமசிவனைப் பார்த்து, "ஐயனே! அடியார் படும் துயரத்தை நீர் அறிந்தும் அறியாதவர் போல் இருக்கின்றீர்! உமது திருவுள்ளத்தில் இரக்கம் பிறக்கும் என்றெண்ணி இது வரையும் பொறுத்திருந்தோம். ஈசனே! இனிப் பொறுக்க முடியாது!" தீபாவளிக்குத் தலை நாளில் உம் அடியார் அனைவரும் வேலை நிறுத்தம் செய்வதாக உறுதி செய்துள்ளார்கள். இது திருத்தொண்டர் சங்கத்தின் தீர்மானம்.

"திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோல் தட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஒண காந்தன் தளியு ளிரே”[1]

என்று பாடி நின்றார் சுந்தரம்.

அப்போது பரமசிவன் குடும்பத்தில் ஒரு பரபரப்பு உண்டாயிற்று. கணபதி எழுந்து வந்து தந்தையின் முகத்தைத் தளர்ந்து நோக்கினான். கங்கை சடையினரின்றும் இழிந்து, தீபாவளியன்று கங்கா ஸ்நானம் நடை பெறவேண்டுமே! அதற்கு வழி என்ன? என்று கேட்பவள் போலத் தலைவனை வணங்கி நின்றாள்.


  1. சுந்தர மூர்த்தி சுவாமிகள் தேவாரம்.