பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தமிழ் இன்பம்


தந்தை :- பிள்ளாய்! கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பொருளும் கவைக்குதவுமா? நானே முயன்று கண்டுபிடித்தேன். 'வருந்தினால் வாராத தொன்றில்லை' என்பது உண்மையல்லவா?

பையன் : - நீ வருந்திக் கண்டுபிடித்த அர்த்தத்தை எனக்குச் சொல்லித் தரமாட்டாயா?

தந்தை : - உனக்கில்லாமலா! இதோ சொல்கிறேன். ஆனால், நான் சொல்லும் அர்த்தத்தை எவனிடமும் சொல்லாதே! இப்பிரபஞ்சம் படுமோசம்! பாடுபடுபவன் ஒருவன்; பலனடைபவன் மற்றொருவன். இந்தப் பழமொழியின் பொருளைச் சொல்விவிட்டாயோ மறுநாள் "வெடிகுண்டு விகடனில் அதைக் கேட்டவன் வெளியிட்டுப் பணமும் புகழும் பெற்றுக் கொள்வான்.

பையன் : - நான் சொல்வேனா, அப்பா! நீ உன் மூளையைக் கசக்கிப் பிழிந்து கண்டு பிடித்த கருத்தை நானா வெளியே சொல்வேன்?

தந்தை : - நீ சமர்த்தன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இவ்வஞ்சக உலகத்தை நினைக்கும் பொழுது என் நெஞ்சம் நடுங்குகிறது. நன்றாகக் கேள். நன்னூல்தான் உனக்குக் கனபாடமாய்த் தெரியுமே! புள்ளி என்பது ஆய்த எழுத்து. அது மூன்று புள்ளியாய் அடுப்புக்கட்டி போலிருக்கும். பள்ளிக்கூடப் படிப்பு அடுப்புக் கட்டிக்குக்கூட உதவாது என்பது அப்பழமொழியின் கருத்து. அடுப்புக் கட்டிக்கு உதவாது என்றால், அடுப்புக்கு உதவாது: ஒரு பிடி அன்னத்துக்கு உதவாது என்பதைப் படிப்படியாக உய்த்துணர வேண்டும்.