பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. புறநானூறு மகாநாடு[1]

தலைமை உரை

மெய்யன்பர்களே! செந்தமிழ்ச் செல்வர்களே!

இந் நாள் தமிழ்நாட்டுக்கு ஒரு நன்னாள் ஆகும். தமிழ்த் தாயைப் போற்றும் அன்பரும் அறிஞரும் நூற்றுக்கணக்காக இங்கே நிறைந்திருக்கின்றார்கள். தமிழ் நாடெங்கும் தமிழ் முழக்கம் செழித்து வருகின்றது. எங்கும் தமிழ்மணம் கமழ்கின்றது. சிந்தைக்கினிய செவிக்கினிய செந்தமிழைத் தமிழ்நாட்டார் சீராட்டத் தொடங்கிவிட்டார்கள். பண்டைத் தமிழ் நூல்களைப் படிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் தொண்டர் பல்லாயிரவர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உணர்ச்சியின் வடிவமே இம்மகாநாடு. தலைசிறந்த ஒரு தமிழ் நூலின் திறத்தினை எடுத்துரைப்பதே இம் மகாநாட்டின் கருத்து. புறநானூறு என்னும் பெருமை சான்ற நூலைப் பற்றிப் புலவர் பலர் இங்கே பேச இசைந்துள்ளார்கள். அவர்தம் நல்லுரைக்கு முன்னுரையும் பின்னுரையும் நிகழ்த்தும் பேறு எனக்குக் கிடைத்திருக்கின்றது. இம்மகாநாடு சிறப்புற நடைபெறுவதற்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகின்றேன்.

பழந் தமிழ்நாட்டின் தன்மையை எடுத்துக்காட்டும் தொகை நூல்களில் தலைசிறந்தது புறநானூறு என்பர்.


  1. சென்னையில், தென்னிந்திய சைவு சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் நடத்தப்பெற்றது.