பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தமிழ் இன்பம்


மாறாத பாலன், உடல் வற்றிய தாயிடம் பால் காணாது வருந்தி அடுப்பருகே யிருந்த சோற்றுப் பானையிடம் தவழ்ந்து, அதன் வெறுமை கண்டு வெதும்பி அழுகின்றான். பசியாலழும் பாலனைக் கண்டு மனம் பொறாத என் மனையாள் வானிலே விளங்கும் வளர்மதியைக் காட்டியும், புலி வருமென்று பயமுறுத்தியும் அவன் கருத்தை மாற்ற முயல்கின்றாள்; மதியையும் புலியையும் மனத்திற் கொள்ளாது ஓயாமல் அழுகின்ற மைந்தனை நோக்கி மனம் குழைகின்றாள்' என்று குமணனிடம் தன் குறையை உருக்கமாக எடுத்துரைத்தார். கவி நலம் சான்ற அறிஞரைப் பற்றிய வறுமையை அறிந்த குமணன், மனம் வருந்தி அவரது குறையை அகற்றப் போதிய பரிசளித்தான்.

வள்ளலது பரிசின் வளம் கண்ட புலவர் பெருமித முற்று மலர்ந்த முகத்தோடு தம் மனையகம் போந்து மனையாளை நோக்கி, "மாதே! இதோ குமணன் கொடுத்த கொடையைப் பார்! இப் பொருள்களெல்லாம்,

"பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிய வளனே"

இவற்றை வறுமையால் வருந்தும் உற்றார்க்கும் உறவினர்க்கும் எடுத்து வழங்கி இன்புறுவாயாக!" என்று புலவர் கூறும் மொழிகளில் குமணனது கொடைத்திறம் இனிது விளங்கக் காணலாம்.

இவ்வாறு இரவலர்க்கு இல்லை யென்னாது ஈந்த வள்ளலது புகழ் தமிழ்நாடெங்கும் பரவிற்று. கொடையிற் சிறந்தவன் குமணன் என்று கற்றோரும் மற்றோரும்