பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

9


இசையவில்லை. “மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிது” என்றெண்ணி அவன் உயிர் துறக்கத் துணிந்தான்; காவலாளன் கொடுத்த தண்ணிர்க் கலத்தைக் கையிலே வைத்துக்கொண்டு ஒரு கவி பாடினான்; உயிர் துறந்தான்.

முற்காலப் போர்முறை

பகைமையும் போரும் எக் காலத்தும் உண்டு. முற்காலப் போர் முனைகளிற் சிலவற்றைப் புற நானூற்றிலே காணலாம். அக் காலத்தில், ஒர் அரசன் மாற்றரசனது நாட்டின்மீது படையெடுத்தால், அந்நாட்டில் வாழும் நல்லுயிர்களை நாசமாக்கக் கருதுவதில்லை. பசுக்களையும், அறவோரையும், பெண்களையும், பிணியாளரையும், இவர் போன்ற பிறரையும் போர் நிகழும் இடத்தைவிட்டுப் புறத்தே போய்விடும்படி எச்சரித்த பின்னரே படையெடுப்பு நிகழும். இந்த அறப்போர் முறை முதுகுடுமிப் பெருவழுதியிடம் அமைந்திருந்ததாக நெட்டிமையார் என்ற புலவர் பாராட்டுகின்றார். இன்னும், போர்க்களத்தில், வீரர் அல்லாதார். மேலும், புறங்காட்டி ஒடுவார் மேலும், புண்பட்டார் மேலும், முதியவர் மேலும் படைக்கலம் செலுத்தலாகாது என்பது பழந்தமிழர் கொள்கை. அன்னார்மீது படைக் கலம் விடுத்த பொருநரைப் 'படை மடம் பட்டோர்' என்று தமிழர் உலகம் பழித்துரைத்தது.

கோட்டை கொத்தளங்கள்

முற்காலத்தில் தமிழரசர்கள் கட்டிய கோட்டைகளும் கொத்தளங்களும் புறநானூற்றிலே குறிக்கப் பட்டுள்ளன. பாண்டி நாட்டிலே, கானப்பேர் என்ற ஊரில் ஒரு பெரிய கோட்டை இருந்தது. ஆழ்ந்த