பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தமிழ் இன்பம்


தமிழ்க்காவியம் எழுந்த காலத்தும் பெளத்த மதம் தலையெடுத்து நின்றதாகவே தெரிகின்றது. அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த புத்த சங்கத்தில் அறவணவடிகள் என்னும் பெளத்த முனிவர் விளங்கினார். அவர் சிறந்த சீலர். கோவலன் கொலையுண்டு இறந்த பின்னர் அவன் காதலியாகிய மாதவியையும், அவன் மகள் மணிமேகலையையும் பெளத்த சமயத்தில் சேர்த்தவர் அவரே. இன்றும் அவர் பெயர் காஞ்சிபுரத்தில் நிலைபெற்றிருக்கின்றது. அவர் தங்கியிருந்து தவம் புரிந்தமையால் அறவணன் சேரி என்று பெயர் பெற்ற தெரு இப்பொழுது அறப்பணஞ் சேரி என்று அந்நகரில் வழங்குகின்றது.

சாக்கிய மதம் சிறந்திருந்த காலத்தில், சிதம்பரத்தில் வாழும் தில்லை மூவாயிரவரோடு சமய வாதம் செய்வதற்காகப் பெளத்த முனிவர்கள் திரண்டு போந்தார்கள் என்றும், அப்பொழுது, அங்கிருந்த மாணிக்கவாசகர் அம் முனிவர்களுடன் வாது செய்து அன்னாரைச் சைவ சமயத்திற் சேர்த்துவிட்டார் என்றும் சரித்திரம் கூறுகின்றது. ஆகவே, மாணிக்க வாசகர் காலத்திற்குப் பின்பு பெளத்த மதம் தமிழ் நாட்டில் ஆதிக்கமிழந்துவிட்டதென்று சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே சீன தேசத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த யூன்சியாங் என்பவர். பெளத்த மதம் தளர்ச்சியுற்றுத் தாழ்வடைந் திருந்த நிலையைக் குறித்து வருந்தி எழுதியுள்ளார். எனவே, மணிமேகலை எழுந்த காலத்தில் ஓங்கி நின்ற பெளத்த மதம், ஏழாம் நூற்றாண்டில் தளர்ந்து தாழ்ந்துவிட்டதென்று தோன்றுகிறது.