பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழியும் நெறியும்

179


ஆயினும், அம்மதத்தைச் சார்ந்தவர் ஆங்காங்கு இல்லாமற் போகவில்லை. திருஞானசம்பந்தர் காலத்தில், இப்பொழுது பாண்டிச்சேரி என்று வழங்கும் புதுச்சேரிக்கருகே போதிமங்கை என்ற ஊர் இருந்தது. அங்குப் பெளத்த சமயத்தார் இபருந்தொகையினராக வாழ்ந்தனர். சாக்கிய நூல்களையும் தருக்க நூல்களையும் நன்கு கற்று வாது புரிய வல்லார் பலர் அவ்வூரில் இருந்தனர். திருஞானசம்பந்தர் சிவனடியார்களோடு அவ்வூரைக் கடந்து செல்லும்போது சாரிபுத்தர் என்னும் சாக்கிய முனிவர் அவரை வாதுக்கு அழைத்தார். அவ்வூர்ச் சத்திரத்தில், சாரிபுத்தருக்கும் திருஞானசம்பந்தருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது. அவ்வாதத்தில் தோல்வியுற்ற சாரிபுத்தரும் அவரைச் சார்ந்த பெளத்தரும் சைவ சமயமே மெய்ச் சமயம் எனத் தெளிந்து, திருஞானசம்பந்தர் அடிகளில் விழுந்தெழுந்து சைவராயினர் என்று பெரிய புராணம் கூறுகின்றது.

தமிழ் நாட்டுப் பெருவேந்தருள் ஒருவனாகிய இராஜராஜ சோழன், நாகப்பட்டினத்தில் ஒரு புத்த ஆலயம் கட்டுவதற்கு அனுமதியளித்ததோடு, அதற்கு நன்கொடையும் வழங்கினான் என்பது சரித்திரத்தால் அறியப்படுகின்றது. இன்னும், வீரசோழன் என்ற பட்டப் பெயர் பூண்ட வீர ராஜேந்திரன் அரசாண்ட காலத்தில், பெளத்த சமயத்தினராகிய புத்தமித்திரன் என்னும் புலவர் தமிழில் ஒர் இலக்கணம் செய்தார். அந்நூல் வீரசோழியம் என்று பெயர் பெற்றது.