பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தமிழ் இன்பம்


அமர்ந்து அருகனார் அறமுணர்த்தார். கூவிள மரம் எப்பொழுதும் ஈசனுக்கு உகந்ததாகும். இன்னும், வன்னியும் தென்னையும், மருதும் நாவலும், மற்றைய மரங்களும் இறையவர் விரும்பி உறையும் இடங்களாகும். வினை தீர்க்கும் விநாயகரை வேம்பும் அரசும் கலந்து நிற்குமிடத்தில் அமைத்து வணங்கும் பழக்கம் இன்னும் தமிழ்நாட்டில் நிலவுகின்றது.

மரங்களைப் போலவே செடிகொடிகளும், புற்பூண்டுகளும் இறையவரோடு இணைந்து வாழும் தன்மை அறியத்தக்கதாகும். எப்பயனும் தராத எருக்கும் குருக்கும் ஈசனுக்கினிய வென்றால், ஏனைய செடிகளைச் சொல்லவும் வேண்டுமோ? தும்பையும் துளசியும், அறுகும் புல்லும் இறையவர்க்கு ஏற்றனவாம். மாயோன் துளசியில் மகிழ்ந்துறைகின்றான். ஆனை முகத் திறைவனுக்கு அறுகினும் இனிய பொருளில்லை. ஆகவே, அறநெறியை அகிலமெல்லாம் பரப்பக் கருதிய தமிழ் மக்கள் உயிர்ப்பொருள் அனைத்தையும் இறையவரோடு இணைத்துக் காக்கக் கருதிய முறை நினைக்குந்தொறும் உள்ளத்தை நெகிழ்விப்பதாகும்.