பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தமிழ் இன்பம்


இராமனைச் சேர்தலே அறிவுடைய உனக்கு அழகாகும்" என்று நீதியின் நேர்மையை எடுத்துரைத்தான்.

அது கேட்ட கும்பகர்ணன் மனம் வருந்தித் தம்பியை நோக்கி, "ஐய, நீரிற்குமிழிபோல் நிலையற்ற தாகிய இவ்வுலக வாழ்வை விரும்பி, இராவணன் எனக்குச் செய்த பெரு நன்றியை மறப்பேனோ? நெடு நாளாக என்னை வளர்த்துப் போர்க்கோலம் செய்து, இங்கனுப்பிய இலங்கை நாதனுக்கு உயிர் கொடாது பகைவர் பக்கம் போவேனோ? இலங்கையின் பெரு நிதியை விரும்பி என் தமையனது உயிரை வாங்கும் பகைவனைப் பணிந்து இரந்து பதவி பெற்று இருத்தல் எனக்கு ஏற்றதன்று. நீ சொல்லிய நீதி முறையனைத்தும் உனக்குத் தக்கதே" என்று வீரமொழி புகன்று, தம்பிக்கு விடைகொடுத்து அனுப்பினான். தன் தலைவன் தகாத செயல் செய்து நெடும் பகை தேடினான் என்று நன்றாய் அறிந்திருந்தும், இராம வீரனது இணையற்ற கணையால் தான் ஆவி துறப்பது திண்ணம் என்று தெரிந்திருந்தும், ஆவியையும் அளவிறந்த செல்வத்தையும் வெறுத்து, தமையன் பொருட்டு உயிர் துறந்த வீரனது மனநலம் வியந்து போற்றுதற்குரியதன்றோ? ஆகவே, கர்ணனும் கும்பகர்ணனும் செய்ந்நன்றியறிதலாகிய அறத்தை ஆவியினும் அருமையாக ஆதரித்த வீரர் என்பது இனிதுணரப்படும்.