பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

15


என்று அவன் மனப்பான்மையை முடமோசியார் என்னும் புலவர் விளக்கிப் போந்தார். இரப்போர்க்கு இல்லை என்னாது கொடுத்தான் அவ்வள்ளல். ஆனால், கைப்பொருளைக் கொடுத்து, அறத்தை அதற்கு ஈடாகக் பெறும் வணிக னல்லன் அவன். கொடுப்பது கடமை, முறைமை என்ற கருத்து ஒன்றே அவன் உள்ளத்தில் நின்றது. இத்தகைய செம்மனம் படைத்தவர் இவ்வுலகில் நூறாயிரவருள் ஒருவர் அல்லரோ? பாரியும் ஆயும் போன்றவர் பலர் பண்டைத் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள். கொல்லி மலையை ஆண்ட ஒரியும், மலையமான் என்னும் திருமுடிக்காரியும், மழவர் கோமானாகிய அதிகமானும், பழனிமலைத் தலைவனாகிய பேகனும், கொங்கர் கோமானாகிய குமணனும், தோட்டிமலை நாடனாகிய நள்ளியும், கொடையிற் சிறந்த குறுநில மன்னர்கள்.

பழைய குலமும் குடியும்

பழந்தமிழ் நாட்டில் விளங்கிய குலங்களையும் குடிகளையும் புறநானூற்றிலே காணலாம். மழவர் என்பவர் ஒரு குலத்தார். அவர், சிறந்த வீரராக விளங்கினர். சோழநாட்டில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள திருமழபாடி என்னும் பழம்பதி. அவர் பெயரைத் தாங்கி நிற்கின்றது. திருமழபாடி, மூவர் தமிழ் மாலையும் பெற்று மிளிரும் மூதூராகும்; 'பொன்னார் மேனியனே' என்று எடுத்து, மன்னே, மாமணரியே, மழபாடியுள் மாணிக்கமே, அன்னே, உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே' என்று, சுந்தரமூர்த்தி புகழ்ந்து போற்றிய பெருமை சான்றது. மழவர்பாடி என்பதே மழபாடியாயிற்று. மழவர் குலத்திலே அதிகமான் என்னும் பெருமகன் தோன்றினான். அவன், சிவநெறியில் நின்ற சீலன்;