பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியார் பாட்டின்பம்

247


உலகினர்க்கு ஒளிநெறி காட்டும் உயரிய மறையிலும், கலைமகள் மகிழ்ந்துறைகின்றாள். இன்னும், இன்னிசை வீணையை மலர்க்கரத்தி லேந்திய கலைமகள், மக்கள் பேசும் மழலை மொழியிலும், மாதர் இசைக்கும் மதுரப் பாட்டிலும்; கீதம் பாடும் குயிலின் குரலிலும், சிறை யாரும் மடக்கிளியின் செந்நாவிலும் அமர்ந்திருக்கின்றாள். அன்றியும், மாட கூடங்களை அழகு செய்யும் ஓவியங்களிலும், கோயில்களில் அமைந்த சீரிய சிற்பங்களிலும் கலைமகள் விளங்குகின்றாள். எனவே, செவியினைக் கவரும் இயற்கவியும் இன்னிசையும், கண்ணினைக் கவரும் ஓவியமும் சிற்பமும் அறிவுத் தெய்வம் உறையும் இடங்களாகும்.

இவ்வுலகில் வாழும் மக்களுக்குப் பயன்படும் பொருள்களை ஆக்கி அளிக்கும் தொழிலாளர் பலராவர். இரும்பை யுருக்கி வெம்படை வடிக்கும் கருங்கைக் கொல்லரும், திண்ணிய மரத்தைத் தரித்து முரித்துப் பணிசெய்யும் தச்சரும், குழைத்த மண்ணாற் பாண்டங்களை வனையும் குயவரும், பட்டாலும் பருத்தி நூலாலும் ஆடைகளை நெய்யும் சாலியரும் உலக வாழ்க்கைக்குப் பயன்படுங் கலைகளைப் பயின்று பணி செய்கின்றார்கள். அன்னார் பணிகளிலும் கலை மாது பண்புற்று இலங்குகின்றாள்.

இன்னும் வேதம் பயிலும் வேதியரும், வீரம் விளைக்கும் வேந்தரும், வான்பொரு ளீட்டும் வணிகரும், தாளாண்மையிற் சிறந்த வேளாளரும் ஒருங்கே வணங்கும் விழுமிய தெய்வம் அறிவுத்தெய்வமேயாகும். மாந்தரது உள்ளத் தாமரையில் இனிதுறைந்து, அவர்