பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

25


வாழ்த்தினார் மற்றொரு முனிவர். ஔவையார் எழுந்தார்; 'அரசே, உன் நாட்டில் வரப்பு உயர்க!' என்று வாழ்த்தினார். அவ் வாழ்த்துரையின் பொருத்தமும் பொருளும் அறியாத சபையார், ஒருவரை ஒருவர் வெறித்து நோக்கினர். அது கண்ட ஒளவையார், தம் வாழ்த்துரையின் கருத்தை விரித்துரைப்பாராயினர்; “சபையோரே! 'வரப்பு உயர்க!' என்று இளவரசை நான் வாழ்த்தினேன். விளை நிலத்தின் வரப்பு உயர, நீர் உயரும்; நீர் உயர, நெல் உயரும்; நெல் உயர, குடி உயரும்; குடி உயர, கோன் உயர்வான்" என்று விளக்கம் கூறினார்.

தமிழ் நாட்டாரது கொள்கையை இவ்வாறு சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார் ஔவையார். 'உழவனே நாட்டின் உயிர்நாடி; அவன் ஊக்கமே அரசனது ஆக்கம்; அவன் கையால் நட்ட நாற்று முடி தழைத்தால், மன்னன் முடி தழைக்கும்' என்று புலவர் கள் பாடினார்கள். அரசனது செங்கோலை நடத்தும் கோல், 'உழவன் ஏரடிக்கும் சிறு கோல்' என்றார் கம்பர். 'உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி' என்றார் வள்ளுவர். இதனாலன்றோ உழவன் கையைப் புகழ்ந்தனர் கவிஞர்?

“மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும் கை - சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி
காக்கும்கை காராளர் கை”.

என்ற பாட்டின் ஒவ்வொரு சொல்லும் உண்மை என்பது இன்று நாட்டுக்குப் படியளக்கும் அரசாங்கத்தார்க்கும்

3