பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

29

குணங்களின் அழகையும் அவர்கள் கொண்டாடினார்கள்; பயனுள்ள பொருள்களின் பண்பறிந்து பாராட்டினார்கள்; மழை பொழியும் மேகத்தை ஒர் அழகிய பொருளாகக் கண்டார்கள்; எழிலி என்று அதற்குப் பெயரிட்டார்கள்; எழில் என்பது அழகு. அழகுடைய பொருள் எழிலி எனப்படும். அமிர்தம் போன்ற மழையைப் பொழிந்து உலகத்தை வாழ்விக்கும் கார்மேகத்தின் கருணை அழகியதன்றோ? அவ்வாறே, உழுகின்ற ஏரின் சீரை அறிந்து, அதனால் விளையும் பயனை உணர்ந்து, ஏர் என்ற சொல்லுக்கு அழகு என்னும் பொருளைத் தந்தனர் பழந்தமிழர்.

முன்னாளில் ஏருக்கு இருந்த ஏற்றமும் எடுப்பும் வேறு எதற்கும் இருந்ததாகத் தோன்றவில்லை. படை எடுக்கும் வீரனையும், பாட்டிசைக்கும் புலவனையும் ஏரடிக்கும் உழவனாகவே கண்டது பண்டைத் தமிழ் நாடு. வில்லாளனையும் இனிய சொல்லாளனையும் ஏராளனாகத் திருவள்ளுவர் காட்டுகின்றார்.

"வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை"

என்ற திருக்குறளில் வில்லையும் சொல்லையும் ஏராக உருவகம் செய்தருளின்ார் திருவள்ளுவர். அப்படியே வாளேந்திய வீரனை 'வாள் உழவன்' என்றும், வேல் ஏந்திய வீரனை 'அயில் உழவன்' என்றும் தமிழ்க் கவிஞர்கள் போற்றுவாராயினர்.

ஏரால் விளையும் உணவுப் பொருள்களை யெல் லாம் ஒரு சொல்லால் உணர்த்தினர் தமிழ் நாட்டார். இக்காலத்தில் மளிகைக் கடை என்பது பலசரக்குக் கடையின் பெயராக வழங்குதல் போன்று, முற்காலத்