பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தமிழ் இன்பம்


தில் கூலக்கடை என்பது பலவகைத் தானியங்களும் விற்கும் கடைக்குப் பெயராக அமைந்தது. நெல்லும் புல்லும், வரகும் தினையும், எள்ளும் கொள்ளும், அவரையும் துவரையும், பயறும் உளுந்தும், சாமையும் பிறவும் கூலம் என்ற ஒரு சொல்லாலே குறிக்கப்பட்டன. பெரிய நகரங்களில் கூலவீதிகள் சிறந்திருந்தன. சோழநாட்டின் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திலும், பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையிலும் 'கூலங்குவித்த கூல வீதிகள்' இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இன்றும் கூலவீதியைத் திருநெல்வேலியிலே காணலாம். மேலரத வீதியை அடுத்துள்ள தெரு, 'கூலக்கடைத் தெரு’ என்றே இது காறும் வழங்கி வருகின்றது. மதுரை மாநகரில் கூலக் கடை வைத்திருந்த சாத்தனார் 'கூலவர்ணிகன் சாத்தனார்' என்று பெயர் பெற்றார். அவரே மணிமேகலைக் காவியம் இயற்றிய கவிஞர் என்பர். அந்நாளில் இசையரங்குகளிலும், நடன சாலைகளிலும் உழவரை வாழ்த்தும் வழக்கம் இருந்ததாகத் தெரிகின்றது. நாடாளும் மன்னனை வாழ்த்திய பின்பு, உணவளிக்கும் உழவனை வாழ்த்துவர் இசைவாணர். 'பதினெண் கூலமும் உழவர்க்கு மிகவே' என்னும் வாழ்த்துரை ஒரு பழைய இசை நூலிற் காணப்படுகின்றது. -

உழவுத் தொழிலால் மேன்மையுற்ற நாடொன்று 'நாஞ்சில் நாடு' என்று பெயர் பெற்றது. நாஞ்சில் என்பது ஏர். மலையாள மன்னருடைய ஆட்சியில் அமைந்துள்ளது நாஞ்சில் நாடு. அந் நாட்டை ஏராலே சீராக்கி, உழைப்பாலே சிறப்பாக்கியவர் தமிழ் நாட்டு உழவரே என்பதில் சிறிதும் ஐயமில்லை.