பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

37



இன்னும், ஈழநாட்டிலே பிறந்து, தமிழ்நாட்டிலே வாழ்ந்து, தமிழ்த்தொண்டு புரிந்த பேரறிஞர் பலராவர். மெய் வருத்தம் பாராது பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து சிறந்த இலக்கண நூல்களையும் இலக்கிய நூல்களையும் முதன்முதலாக அச்சிட்டுத் தமிழகத் தார்க்கு உதவிய பெருமை யாழ்ப்பாணத்தில் தோன்றிய தாமோதரம் பிள்ளையவர்களுக்கே உரியதாகும். நற்றமிழ்ப் புலமையும் நாவன்மையும் ஒருங்கே வாய்ந்து தமிழ் மொழிக்கும் சிவநெறிக்கும் அரும்பெருந் தொண்டு செய்த ஆறுமுக நாவவலரை அறியாதார் தமிழ்கறு நல்லுகத்தில் உளரோ? இந்நாவலர் பெருமான் யாழ்ப் பாணத்து நல்லூரிலே பிறந்து தில்லையம்பதியிலே வாழ்ந்து எல்லையற்ற புகழெய்தினார். இன்னும் முத்தமிழில் நடுநாயகமாக விளங்கும் இசைத்தமிழுக்கு விழுமிய தொண்டு செய்த விபுலானந்த அடிகளும் இந்நாட்டவரேயாவர். பழந் தமிழ்நாட்டில் சிறந்த இசைக்கருவியாக விளங்கிய யாழின் திறத்தையும் தமிழிசையின் நலத்தையும் ஆராய்த்து யாழ்நூல் என்னும் பெயரால் இசையுலகத்திற்கு அரியதொரு விருந்த ளித்த அறிஞர் பெருமானை அறியாதார் அறியாதாரே.

இலங்கை நாட்டிலே, யாழ்ப்பாணம், தமிழர் வாழும் தொன்னகரம்; தமிழ்மணங் கமழுந் திருநகரம். தமிழர் பண்பாடு யாழ்ப்பாணம் என்ற சொல்லிலே விளங்குகின்றது. யாழ்ப்பாணர் என்பார் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு வகுப்பார். பண்ணோடு இசை பாட வல்லவர் பாணர் என்று முன்னாளில் அழைக்கப் பெற்றனர். அவருள் யாழிலே வல்லவர்கள் யாழ்ப் பாணர் என்று பெயர் பெற்றார்கள். சிலப்பதிகாரத்தில்