பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

43


என்னும் மூவகைத் தமிழையும் முன்னாளில் முனிவரும் மன்னரும் முன்னின்று வளர்த்தார்க்ள். முத்தமிழையும் துறையோகக் கற்ற வித்தகராகிய முனிவர் ஒருவர், பொதிய மலையில் அமர்ந்து தமிழ்ப் பணி புரிந்தார். அவரைத் திரு முனிவர் என்றும், குறு முனிவர் என்றும், முத்தமிழ் முனிவர் என்றும் கவிஞர்கள் புகழ்ந்துரைத்தார்கள். 

              "முத்தமிழ் மாமுனி நீள்வரை யேநின்று
               மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு”

என்று பாடினார் பாரதியார்.

இத்தகைய பெருமை வாய்ந்த முனிவர், தமிழ் நாட்டிற்கு மலைபோல் வந்த இடரை மஞ்சுபோல் இசைத் தமிழால் அகற்றிப் பாதுகாத்தார் என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. 'ஆசைக்கோர் அளவில்லை’ என்னும் ஆன்றோர் மொழியை மெய்ப்பித்த இலங்கை வேந்தனாகிய இராவணன் தமிழ் நாட்டிலும் ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டான். தமிழ் மலையாகிய பொதிய மலையைக் கைப்பற்றிக் கொண்டால் தமிழ் நாட்டை வளைத்து ஆட்சி புரிதல் எளிது என்று எண்ணினான் அம் மன்னன். அந்நோக்கத்தோடு பொதிய மலைக்குப் போந்தான்; அங்கே முத்தமிழ் முனிவராகிய அகத்தியர் அமர்ந்திருக்கக் கண்டான்; இராவணன் வல்லரசனாயினும் இன்னிசையில் ஈடுபட்டான். நாரத முனிவனும் நயக்கும் வண்ணம் நல்லிசை பாட வல்லவன்; பன்னருஞ் சாமகீதம் பாடி ஈசனது இன்னருளைப் பெற்றவன்; இசைக்கலையில் இத்துணை ஏற்றம் வாய்ந்த இராவணன் தமிழிசையிற் புகழ் பெற்ற முனிவரிடம் தன் கைவரிசையைக் காட்ட ஆசைப்பட்டான். அவன் கருத்தறிந்த தமிழ் முனிவர் தம் இசைக் கருவியாகிய யாழை மீட்டினார்.